Pages

Friday, June 13, 2014

பயங்கரவாதிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கு நாங்கள் ஆதரவு வழங்கவில்லை. நாட்டின் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பதற்கே ஆதரவு வழங்குகின்றோம்: விமலசேன!

Friday, June 13, 2014
இலங்கை::யாழில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குழுவொன்றினை கைது செய்துள்ளதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன தெரிவித்துள்ளார்.
 
அவர்களிடமிருந்து 28 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
 
யாழ். மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பல இடங்களில் நடைபெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் கடந்த மாதம் அரியாலை பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவரிடம் இருந்த தங்க நகைளை கொள்ளையிட்டு சென்றிந்தனர்.
 
அது தொடர்பான புலன்விசாரணையின்போது சந்தேகநபர் ஒருவரின் கைரேகை அடையாளம் கிடைக்கப்பெற்றது அதனை கொண்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போதே குறித்த சந்தேகநபர் உட்பட ஆறு சந்தேகநபர்களை கைது செய்திருந்தோம்.
 
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் யாழில் உள்ள பிரபல நகைக்கடை
உரிமையாளர் ஆவார். அவரே கொள்ளையிட்ட நகைகளை வாங்கி வந்துள்ளார்.
 
அவர்களிடம் இருந்து இதுவரை ஒரு கொலை குற்றம் உட்பட 8 பாரிய குற்றங்கள் தொடர்பான தகவல்களும் 6 வீடு உடைப்பு தொடர்பான தகவலுக்கும் கிடைத்துள்ளன. அத்துடன் அவர்களிடம் இருந்து இதுவரை 28 அரை பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
 
இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். இக் குழுவினரை கைது செய்யப்பட்ட பின்னர் யாழ் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் கொள்ளை சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
அத்துடன் சந்தேகத்தின் பெயரில் 58 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 22 பேரும், களவு தொடர்பில் 10 பேரும், மற்றும் பிற குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என இந்தவாரம் யாழ். பிராந்திய பொலிஸ் பிரிவில் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
 
யாழில் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளுக்காக, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரிலுள்ள ஆளணிப் பற்றாக்குறையினாலேயே  இராணுவத்தினரின் உதவியினை தாம் பெற்றுக்கொள்வதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 
யாழ்., தலைமைப் பொலிஸ் நிலையத்தின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவையில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒரேயொரு விசேட அதிரடிப்படை முகாம் உள்ளமையினால் அங்கும் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது.
 
இதனாலேயே இரவுநேர ரோந்து மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரையும் இணைத்துக்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை, பயங்கரவாதிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கு நாங்கள் ஆதரவு வழங்கவில்லை. நாட்டின் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பதற்கே ஆதரவு வழங்குகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
இலங்கையின் இராணுவத்துக்கு ஆட்சேர்க்க உதவுவதில் எவ்வித குற்றங்களும் இல்லை. நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆட்சேர்க்கவில்லை. இருந்தும், நாம் இதுவரையில் எவரையும் இராணுவத்திற்குச் சேர்த்துக்கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
 
அத்துடன், இராணுவத்தில் இணைவதற்கு பொலிஸாரினால் வழங்கப்படும் நன்னடத்தைப் பத்திரமும் அவசியமானது. அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகின்றோம் என அவர் கூறினார்.

No comments:

Post a Comment