Pages

Sunday, June 15, 2014

அன்று புலிகள் செய்ததை இன்று வடக்கிலுள்ள தமிழ்த் தேசியம் பேசும் தமிழ் அரசியல்வாதிகளும், புலம்பெயர் நாடுகளில் ஈழக்கனவு காணும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் மேற்கொண்டு வருகின்றன!

Sunday, June 15, 2014
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை வன்முறைக் கலாசாரத் திற்குள் தள்ளிவிட்டு அதன் மூலமாக தமது இலக்குகளை அடைவதனை நோக்காகக் கொண்டு இரண்டு குழுக்கள் இயங்கி வருகின்றன. இது இன்று நேற்றல்ல பல வருடங்களாகத் தொடர்கின்ற ஒரு தொடர் கதை. இந்தக் குழுக்களின் உள்நோக்கத்தை அறிந்து கொள்ளாத இப்பல்கலைக்கழக மாணவர்கள் தமது இலக்கான கல்வி கற்றலை விடுத்து வன்முறைகளில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.
 
பல்கலைக்கழக மாணவர்களைப் பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இக்குழுக்கள் சர்வதேச மட்டத்தில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இதுவரை காலமும் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட எந்தவொரு பிரச்சினையையும் அம்மாணவர்கள் சுயமாக மேற் கொண்டது கிடையாது. இக்குழுக்களின் தூண்டுதலினாலேயே இம்மாண வர்கள் தேவையற்ற ஆர்ப்பாட்டங்களிலும், விரிவுரைப் பகிஸ்கரிப்புக் களிலும் ஈடுபட்டு வருகின்றனர். முன்னர் புலிகள் இந்தப் பல்கலைக்கழக மாணவர்களைத் தமது இயக்கத்தின் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்தனர். தாம் செய்ய எண்ணும் வன்முறைகளை இந்த அப்பாவி மாண வர்களை வைத்து மேற்கொண்டனர். எதற்காக ஆர்ப்பாட்டம் செய்கின் றோம் அல்லது எதற்காக விரிவுரைகளைப் பகிஸ்கரிக்கின்றோம் என்பது தெரியாமலேயே புலிகள் பின்புலத்தில் நின்று இயக்க இம்மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர்.
 
இன்று புலிகள் இல்லாத நிலையிலும் இம்மாணவர்கள் அதேபோன்ற செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அன்று புலிகள் செய்ததை இன்று வடக்கிலுள்ள தமிழ்த் தேசியம் பேசும் தமிழ் அரசியல்வாதிகளும், புலம்பெயர் நாடுகளில் ஈழக்கனவு காணும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் மேற்கொண்டு வருகின்றன. இது புரியாது இந்த அப்பாவி பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வியையே கேள்விக்குறியாக்கும் வகையில் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். உண்மையில் வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பெரும் சொத்து கல்விச் சொத்தாகவே இருந்து வருகிறது. புலிகளின் போராட்டத்தினால் அது சற்றுப் பின்னடைவைக் கண்டிருந்தாலும் இன்று அரசாங்கத்தின் பூரண அரவணைப்பில் அம்மக்களின் கல்விச் செல்வம் மீளக் கிடைத்து வருகின்றது. இதனைப் பொறுத்துக் கொள்ளாதவர்களே இக்கல்வி செயற்பாடுகளுக்குக் குந்தகத்தை ஏற்படுத்தி வருவது மட்டு மல்லாது அப்பழியை உதவி செய்து வரும் அரசாங்கத்தின் மீதே அதாவது படையினர் மீது சுமத்தி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டை இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய முற்றாக மறுத்திருந்தார்.
 
இராணுவம் உட்பட முப்படையினர் வடபகுதி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக சகல சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு வழங்குகின் றார்களே தவிர இடையூறுகள் விளைவிப்பதில்லை. இவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்தி ருந்தார். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தமது கல்வி உட்பட சகல நடவடிக்கைகளையும் சுதந்திரமாகவே மேற் கொண்டு வருகின்றனர். இதன் காரணமாகவே அவர்கள் கல்வி நடவடிக் கைகளுக்கு மேலதிகமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் சுதந்திரமாக நடத்தி முடித்துள்ளனர் என்று சுட்டிக்காட்டி யிருக்கும் அவர், இராணுவத்தினரால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்தும் உள்ளார்.
 
வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து பெற்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் வாழ்ந்து வரும் நாடுகளில் தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே இலங்கையில் பிரச்சினை உள்ளது என்று காண்பிக்க இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
 
உண்மையில் இவ்விடயம் குறித்து பல்கலைக்கழக சமூகம் கவனத்திற் கொள்ள வேண்டும். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வியில் வெளியார் தலையிட்டு அதற்கு இடையூறுகளை ஏற்படுத் துவதற்கு இடமளிக்கக் கூடாது.
விரிவுரைகளுக்கு சிறந்த பேராசிரியர்கள் வேண்டும் என்றோ தமது பல்கலைக்கழகத்திற்கு மேலும் வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றோ இப்பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினால் சகல ரும் அதற்காக ஆதரவு கொடுப்பார்கள்.
 
ஆனால் இங்கோ மாணவ சமூகம் தமக்குத் துளியளவும் தேவையில்லாத அரசியல் விடயங்களிற்காக சிலரால் வீதிகளில் இறக்கப்படுவதனை அனுமதிக்கக் கூடாது. இவ்விடயத்தில் பெற்றோரது அக்கறையும் உள்வாங்கப்பட வேண்டும். பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துத் தமது பிள்ளைகளை பல்கலைக்கழகம்வரை அனுப்பிவைக்கும் பெற்றோர் அங்கு அப்பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதில் பெரிதாக அக்கறை கொள்வதில்லை. பாடசாலைக் கல்வி வரை காட்டிய கவனத்தை தமது பிள்ளை பல்கலைக்கழகம் சென்றதும் இவர்கள் கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியதும் அம்மாணவர்களும் தமக்கு எல்லாமே தெரியும் என்பது போலவும் தாம் செய்வதுதான் சரி என்பது போலவும் நடந்து கொள்ளத் தலைப்படுவதுவும் இத்தகைய பிரச்சினைகள் எழக் காரணமாக அமைந்துவிடுகிறது.
 
எனவே இந்நிலையிலிருந்து விடுபட பெற்றோர், மாணவர்கள், கல்விகற்ற பல்கலைககழகச் சமூகம் ஆகிய முக்கூட்டணிகளின் ஒன்றுபட்ட செயற்பாடு அவசியம். இம்மூன்று பிரிவினரும் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் எந்தவொரு வெளியார் சக்தியும் பல்கலைக்கழக விடயத்தில் தலையிடவோ அல்லது தவறாக வழிநடத்தவோ முடியாது விடும். பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தெரிவித்ததுபோல இன்று அரசாங்கம் வடக்கில் கல்விச் செயற்பாடுகளுக்காக பல விடயங்களைச் செய்து வருகின்றது. படையினர் இம்மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு பல உதவிகளைச் செய்து வருகின்றனர்.
 
அவற்றை இம்மாணவர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொண்டு கல்வியில் முன்னேற வேண்டும். உங்களை வைத்து தமது இலக்குகளை அடைய முனையும் குழுக்களை இனங்கண்டு விரட்டியடிக்க வேண்டும். போராட்டம் என்று புறப்பட்டதனால் வடபகுதி கல்விநிலை கண்ட மோசமான பாதிப்பை உணர்ந்தாவது மாணவர்கள் புத்திசாதுர்யத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment