Sunday, April 27, 2014

அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவது சாதனையா? தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்த TNA எனும் தேச துரோக அமைப்பு!!

Sunday, April 27, 2014
இலங்கை::அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கைகள் விடுவதனையும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதனையும், உலக நாடுகளிடையே தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்துத் தரக்குறைவாகப் பேசுவதனையும் சில தமிழ்க் கட்சிகள் தம்மால் மேற் கொள்ளப்படும் பெரும் சாதனையாக நினைத்து வருகின்றன. இதன் மூல மாகவே தமக்குத் தமிழ் மக்களிடையே செல்வாக்குக் கிடைப்பதாகவும் இத்தமிழ்க் கட்சிகள் தப்புக் கணக்குப் போட்டு வருகின்றன. ஆனால் இது உண்மையல்ல.
 
இந்தத் தமிழ்க் கட்சிகள் செய்து வரும் பொய்ப்பிரசாரங்களுக்குள் தமிழ் மக்கள் முன்னொரு காலத்தில் இவ்வாறு கட்டுண்டு கிடந்தது என்பது சிறிதளவு உண்மையாக இருந்தாலும் இப்போது நாட்டிலுள்ள இத்தகைய தமிழ்க் கட்சிகளின் சுயரூபத்தை தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டனர். இதன் காரணமாக இனிவரும் காலத்திலும் இத்தமிழ்க் கட்சிகளின் இந்த உபாயம் தமிழ் மக்களிடம் எடுபடாது என்பது முழுமையாக உணரப்பட்டுள்ளது.
 
தமிழ்க் கட்சிகள் சிலவற்றுக்கு தம்மைத் தமிழ் மக்களிடையே ஆழமாக நிலைநிறுத்துவதற்காக அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்தது. ஏனெனில் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்டுவந்த பாரிய அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன் பேணும் விடயங்களினால் தமிழ் மக்கள் அரசாங்கத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தனர். இதனைத் தடுத்து நிறுத்த அரசாங்கத்தின் மீது இல்லாத பொல்லாத பொய்களை இத்தமிழ்க் கட்சிகள் கட்டவிழ்த்துவிட்டன.
 
பயங்கரவாதத்திற்கு எதிரான இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களை மட்டுமே தமது பக்க நியாயமாக வைத்துக் கொண்டு இத்தமிழ்க் கட்சிகள் தமக்குச் சார்பான பக்கச்சார்புடைய ஊடகங்கள் மூலமாக அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றன. இறுதி யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களாகவுள்ள நிலையிலும் இன்னமும் அதனைப் பற்றியே கதைத்துக் கொண்டும், அதற்கு எதிராகப் பிரசாரங்களை மேற் கொண்டு வருவதும் ஒரு தேவையற்ற விடயம்.
 
கடந்த முப்பது வருட காலத்தை உரிமைப் போராட்டத்திற்கான யுத்தம் எனும் ஒரு தேவையற்ற விடயத்திற்காகச் செலவிட்டதை எண்ணித் தமிழ்ச் சமூகம் கவலை கொள்ள வேண்டும். இனியும் இதுபோன்றதொரு இருண்ட யுகத்திற்குச் செல்ல வேண்டுமா என்பதை எண்ணிப் பார்த்துச் செயற்பட வேண்டும். இன்று தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பது போல நடிக்கும் தமிழ்க் கட்சிகளின் அரசியல்வாதிகள் யுத்த காலத்தில் எங்கே போயிருந் தார்கள்?
 
தமிழ் மக்கள் துன்பத்தை அனுபவித்த போது தமது குடும்பங்களுடன் இந்தியாவிலும், கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் சொகுசாக வாழ்ந்தவர்கள் இன்று தமது அரசியல் இருப்பிற்காக இங்கே வந்து குரல் கொடுக்கிறார்கள். அதற்காக அவர்கள் அரசாங்கத்தைத் தமது துரும்பாகப் பாவிக்கிறார்கள். இந்த உண்மையை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
அரசாங்கத்தை விமர்சித்து தமிழ் மக்களது வாக்குகளை அபகரிக்கும் இத்தமிழ்க் கட்சிகளுக்கு அத்தமிழ் மக்களுக்கு ஏதாவது சேவையைச் செய்ய முடிகிறதா என்றால் அதுவுமில்லை என்பதாகவே நிலைமை உள்ளது. வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் தொண்ணூறு சதவீதமானவற்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி இன்று சுமார் இரண்டு வருடங்களாகப் போகின்றது. ஏதாவதொரு சபையில் ஏதாவதொரு சிறு அபிவிருத்தியாவது நடைபெற்றுள்ளதா? இல்லை.
 
மாறாக பத்தாயிரம் ரூபா வருமானம் தரக்கூடிய மரக்கறிச் சந்தை துவிச்சக்கர வண்டி காப்பகத்திற்காக சபையினுள் கதிரைகளைத் தூக்கியெறிந்து கலகம் விளைவித்து சபையை இயங்க விடாது வைத்துள்ள சம்பவங்களே இடம்பெற்று வருகின்றன. இதற்காகவா தமிழ் மக்கள் இத்தமிழ்க் கட்சிக்கு வாக்களித்தார்கள்? நாட்டிலுள்ள ஏனைய பிரதேசங்களில் உள்ளூராட்சிச் சபைகள் எவ்வாறு சிறப்பாக இயங்குகின்றன என்பதை இக்கட்சியின் உறுப்பினர்கள் சென்று பார்வையிட வேண்டும்.
 
அதேபோன்று வடக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவதற்காக எத்தகைய நாடகங்களையெல்லாம் இத்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டது. அச்சபையைக் கைப்பற்றி ஒரு வருடமாகப் போகின்றது. அது செய்வோம், இது செய்வோம் என்றவர்கள் எதுவும் செய்யாது அரசாங்கம் அடிக்கல் நாட்டிவைத்து கட்டி முடித்த கட்டிடங்களைத் திறந்து
வைத்து புகைப்படங்க ளுக்கு போஸ் கொடுக்கிறார்கள். இச்சபையைப் பொறுப்பேற்றதன் பின்னர் இவர்கள் இதுவரை ஒரு குறிப்பிட்டுக் கூறக்கூடிய திட்டத்தையும் நடைமுறைப் படுத்தவில்லை. காரணம் கேட்டால் அரசாங்கம் முட்டுக்கட்டையாக தடை போடுவதாக வாய் கூசாமல் கூறுவார்கள். இதனை இன்னமும் தமிழ் மக்களில் ஒரு சிறு பிரிவினர் நம்பியும் வருகிறார்கள்.
 
எனவே அரசாங்கத்தை விமர்சித்து அரசாங்கத்திற்கு எதிராகப் பிரசாரம் செய்வதன் மூலமாக அபிவிருத்திகளைக் காண முடியாது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உணர வேண்டும். அரசியல் தீர்விற்காக பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்தால் அதற்கும் மறுப்பே பதிலாக வருகிறது. இணைந்து பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தால் அதற்குத் தயாரில்லை என்கிறார்கள். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பிரசன்னமாகி உங்கள் தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு கோரினால், அது ஒருபோதும் நடக்காது என்கிறார்கள்.
 
இப்படியே போனால் தமிழ் மக்களுக்கான தீர்வுதான் என்ன? அரசாங் கத்தின் மீது தமிழ் மக்கள் வெறுக்கும் வகையில் பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்து தமது இருப்புக்களை ஸ்திரமாக்கும் இத்தமிழ் அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்து ஒரு அந்தஸ்தை வழங்கியுள்ள தமிழ் மக்கள் பற்றியும் சிறிதளவு சிந்தித்துச் செயற்பட முன்வர வேண்டும். அரசாங்கத்தை எதிர்ப்பதை இவர்கள் தமது சாதனையாக நினைப்பதையும் கைவிட்டுவிட்டு ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயற்பட முன்வர வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

No comments:

Post a Comment