Tuesday, April 8, 2014

பா.ஜ தேர்தல் அறிக்கை வெளியீடு: வளர்ச்சிக்கு உத்தரவாதம்!

Tuesday, April 08, 2014
புதுடெல்லி:பார்லி. தேர்தல் தொடங்கிய முதல் நாளான நேற்று பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை, கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வெளியிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும், நிர்வாக முடக்கத்திற்க்கு முடிவு கட்டப்படும், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்:
* அரசியல் அமைப்புக்கு உட்பட்ட வகையில் அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கப்படும்.
* சட்டப்பிரிவு 370-ஐ திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வரி விதிப்பில் மாற்றம் மேற்கொள்ளப்படும்.
* வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணம் திரும்ப கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
* நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* நவீன தொழில்நுட்ப உதவியுடன் நாட்டின் நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* உணவு பாதுகாப்பு திட்டத்தை திறம்பட நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* சில்லறை வர்த்தகத்தை தவிர பிற துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு வழங்கப்படும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
* கல்வி, தொழிற்துறையில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் தரப்படும்.
* வீடுகளுக்கும் விளைநிலங்களுக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வியை உறுதி செய்யும் வகையில் தேசிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
* வேளான் விளை பொருட்களை சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்.
* மேல்நிலை கல்வி திட்டம் தரம் உயர்த்தப்படும். நாடெங்கும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் நல்லாட்சி செலுத்தும் என அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் பேசிய மோடி கூறியதாவது:- வலுவான, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் லட்சியம். நல்லாட்சி, வளர்ச்சி என இரண்டே வார்த்தைகளில் பாஜகவின் தேர்தல் அறிக்கையின் சாராம்சத்தை தெரிவித்துவிடலாம். பாஜக தேர்தல் அறிக்கை வெறும் சம்பிரதாயமோ, ஆவணமோ அல்ல இதுவே கட்சியின் லட்சியம் என்றார்.
பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய அக்கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பாஜக தேர்தல் அறக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் ஒன்றுவிடாமல் உறுதியாக செயல்படுத்துவோம் என்றார். பாஜக ஆட்சிக்கு வந்தால், தேர்தல் வாக்குறுதிகளைத் தவிர, மேலும் பல நல்ல திட்டங்களையும் அறிமுகப்படுத்தும் என்று கூறினார்.

No comments:

Post a Comment