Pages

Saturday, April 12, 2014

பாஜ கூட்டணிக்கு ஆதரவு கேட்டு நரேந்திர மோடி நாளை சென்னையில் பிரசாரம் மீனம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்!

Saturday, April 12, 2014
சென்னை::பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். மீனம்பாக்கத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார். இதில், விஜயகாந்த், ராமதாஸ், வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் வருகிற 24ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதமாக தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு ஊரிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்து வருகிறார். பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக தலைவர் வைகோ மற்றும் பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும், கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து தா.பாண்டியன், ஜி.ராமகிருஷ்ணனும் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். பிரசாரம் முடிய இன்னும் 11 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதனால், தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொகுதிகளை முற்றுகையிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் ஒருபுறம் பிரசாரம் செய்ய, வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். தற்போது, தேசிய தலைவர்களும் தமிழகம் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். வருகிற 16ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

முன்னதாக, பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்ய பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை மாலை சென்னை வருகிறார். அவரை பாஜ தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் வரவேற்கின்றனர். மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மோடி சிறப்புரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர்(தனி), காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 தொகுதிகளில் வேட்பாளர்களை மோடி அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பாஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவன தலைவர் ராமதாஸ், மதிமுக பொது செயலாளர் வைகோ, ஐஜேகே தலைவர் பச்சமுத்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சண்முகம் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகின்றனர். மோடி சென்னை வருவதையொட்டி பிரசாரத்தை ரத்து செய்து விட்டு கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இந்தக் கூட்டத்துக்கு கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார், தென் சென்னை இணை கமிஷனர் திருஞானம் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 நரேந்திரமோடி சென்னை வருகையையொட்டி பாஜ மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.  மோடியை தொடர்ந்து பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, வெங்கையா நாயுடு, நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களும் தமிழகத்தில் பிரசாரம் செய்வதற்காக வர உள்ளனர். இந்நிலையில், மோடி பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். மோடி ஏற்கனவே கடந்த பிப்ரவரி 8ம் தேதி சென்னை பொதுக்கூட்டத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment