Pages

Tuesday, April 8, 2014

அமெரிக்க நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் நகல் ஒப்படைக்க சோனியா காந்தி மறுப்பு!

Tuesday, April 08, 2014
நியூயார்க்: சீக்கிய கலவரம் தொடர்பான வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் நகலை ஒப்படைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்து விட்டார்.
 
கடந்த 84ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. 100க்கணக்கான சீக்கியர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக பல காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
மனித உரிமைகள் மீறல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகர கோர்ட்டில் சீக்கிய அமைப்பு ஒன்று கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சோனியாவுக்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு மருத்துவ பரிசோதனைக்காக சோனியா நியூயார்க் சென்றிருந்தார். அப்போது சம்மனை சோனியாவிடம் நேரில் வழங்க கோர்ட் ஊழியர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சோனியாவிடம் சம்மன் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
 
இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, சோனியா தரப்பில் வக்கீல் ஆஜராகி சம்மன் கிடைக்கவில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். சம்மன் பிறப்பித்த தேதியில் சோனியா அமெரிக்காவில் இல்லை என்பதை உறுதி செய்ய அவரது பாஸ்போர்ட் நகலை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பாஸ்போர்ட் நகலை கோர்ட்டில் ஒப்படைக்க முடியாது என சோனியா தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
 
இதற்கு இந்திய அரசு அனுமதி அளிக்காது என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. பாஸ்போர்ட் நகலை தர சோனியா மறுத்துள்ளதால், சம்மன் பிறப்பித்த தேதியில் அவர் அமெரிக்காவில் இருந்தார் என்பதை ஒப்புக் கொண்டிருப்பதாக சீக்கிய அமைப்பு நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் அமெரிக்க கோர்ட் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment