Pages

Friday, April 18, 2014

ரஷ்ய ஆதரவாளர்களை ஒடுக்க உக்ரைன் தீவிரம்!

Friday, April 18, 2014
கீவ்::உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில், அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ள, ரஷ்ய ஆதரவாளர்களை விரட்டும் பணியில், உக்ரைன் ராணுவம் ஈடுபட்டுள்ளது. "சோவியத் யூனியன்' என்ற பெயரில் பல நாடுகள் இணைந்த அமைப்பு சிதறிய பின், அந்த நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த உக்ரைன், தனி நாடானது. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த உக்ரைனை, ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க, மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், அதிபராக இருந்த யானுகோவிச், இதற்கு உடன்படவில்லை.

தலைமறைவு : மக்கள் புரட்சியை சமாளிக்க முடியாத அதிபர், யானுகோவிச் தலைமறைவானார். உக்ரைனின் ஒரு மாகாணமாக இருந்த கிரிமியாவில், ரஷ்யர்கள் அதிகம் வசிக்கின்றனர். எனவே, இதை உக்ரைனிலிருந்து தனியாக பிரிப்பது குறித்து, மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
கிரிமியாவை, ரஷ்யாவுடன் இணைக்க அப்பகுதி மக்கள் ஆதரவளித்ததால், கிரிமியா, ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள ஸ்லோவியான்ஸ்க் நகரிலும், ரஷ்ய ஆதரவாளர்களின் போராட் டம் வெடித்துள்ளது. அங்குள்ள அரசு கட்டடங்களை, போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். "கிரிமியாவில் நடந்தது போல, இப்பகுதியிலும் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்' என, போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இங்குள்ள போலீஸ் நிலையத்தை, ரஷ்ய ஆதரவாளர்கள் கைப்பற்றினர். உக்ரைன் பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, சிலரை கைது செய்துள்ளனர். அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்ய ஆதரவு போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் படி, ராணுவத்துக்கு உக்ரைன் தற்காலிக அதிபர், துருச்சினோவ் உத்தரவிட்டுள்ளார்.

அடக்குமுறை : இந்த எச்சரிக்கையை மீறி, ரஷ்ய ஆதரவாளர்கள், உக்ரைன் நாட்டின் அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதையடுத்து, இப்பகுதிகளில் உக்ரைன் ராணுவம், கவச வாகனங்களுடன் நுழைந்துள்ளது. சொந்த நாட்டு மக்கள் மீது, உக்ரைன் அரசு, அடக்குமுறையை கையாள்வதாக, ரஷ்யா புகார் தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள, ஸ்லோவியான்ஸ்க், டோனட்ஸ்க் நகரங்களில், அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்திருந்த ரஷ்ய ஆதரவாளர்களை அகற்ற முயன்றபோது, அவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் மோதல் மூண்டது. இதனால், அங்கு, உள்நாட்டு போர் ஏற்படும் சூழல் உள்ளது.

உக்ரைன் எல்லையில், ஏற்கனவே 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் தங்கியுள்ளனர்.
அவர்கள், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால், உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட, "நேட்டோ' படைகள் தயார் நிலையில் உள்ளன...

உக்ரைனில் உள்ள பால்டிக் கடற்பகுதியில் ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவாதல், அப்பகுதிகளில் நேட்டோ ராணுவ படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. இதனால் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகமுள்ள கிரீமியாவை வாக்கெடுப்பின் மூலம் ரஷ்யா கைப்பற்றியது. தற்போது அந்த பகுதி ரஷ்யாவுடன் இணைந்துள்ளது. இதை தொடர்ந்து, பால்டிக் கடல் பிராந்தியத்தில் உள்ள கிழக்கு உக்ரைனிய பகுதிகளை கைப்பற்றுவதற்காக ரஷ்ய ராணுவத்தினரின் போர் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது என்று அமெரிக்கா உள்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் காணப்படுவதால், உக்ரைனின் மேற்கே பால்டிக் கடல் பகுதியில் நேட்டோ நாடுகளின் போர் விமானங்களின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும், நேட்டோ படைகள் அங்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ளது என்று நேட்டோ ராணுவ தலைவர் ஆண்டர்ஸ் போக் ராஸ் முஸ்ஸன் நேற்று புருசெல்சில் தெரிவித்தார். கரீமியா பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேட்டோ உறுப்பினர்களான போலந்து மற்றும் பால்டிக் நாடுகளான லுதுவேனியா, எஸ்டோனியா மற்றும் லாட்வியா போன்ற நாடுகள் நேட்டோ கண்காணிப்பு பணியில் பங்கெடுத்து உள்ளன.

உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லையில் ரஷ்யா நிறுத்தி வைத்துள்ள 40 ஆயிரம் ராணுவத்தினரை வைத்து போரிட வேண்டும். அதை விடுத்து, அப்பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று நேட்டோ படையினர் கூறுகின்றனர். போர்பதற்றத்தை தணிக்க ஐ.நா. மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment