Thursday, April 3, 2014

அம்பாரைப் பிரதேச வைத்தியசாலைகளுக்கு மருந்துகள், உபகரணங்கள் கையளிப்பு!

Thursday, April 03, 2014
இலங்கை::
அம்பாரைப் பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு மருந்துகள், உபகரணங்கள் என்பன வழங்கும் நிகழ்வு நேற்று அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இடம் பெற்றது.

அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். சேனக தலாகல தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம்,மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மருந்துகளையும், உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் அம்பாரைப் பிராந்திய திட்டமிடல் சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.எம்.திலக் ராஜபக்ஷ, பதியத்தலாவ மாவட்ட வைத்தியதிகாரி பி.கே.ரத்னசிறி, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி.ஏ.எல்.சஃபீர், பொது மக்கள் தொடர்பு அதிகாரி யூ.எல்.எம்.பஸீர் உள்ளிட்ட வைத்தியர்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உயரதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் ' அரசாங்கமானது எல்லாத்துறைகளையும் விட சுகாதாரத்துறைக்கே அதிகபணத்தைச் செலவிட்டு வருகின்றது. இருந்திட்டபோதிலும் சில தொற்றாநோய்கள் 70 சதவீதமான மக்களைப் பீடித்துள்ளமை கவலை தருகின்ற விடயமாகும். நான் அண்மையில் பதவிசிறிபுர என்ற கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அங்குள்ள மக்கள் சாதாரண அப்பாவி ஏழைகள். அவர்களுக்கு ஒரு விதமான சிறு நீரக நோய் தொற்றியுள்ளது.
 
இதனால் அக்கிராம மக்கள் பல்வேறு இன்னல்களால் துன்புறுகின்றனர். அவர்களைப் பரிசோதித்து,அந்நோயிலிருந்து காப்பாற்றுவதற்கான திட்டமொன்றை ஆரம்பித்திருக்கின்றோம். இத்திட்டம் வெற்றிபெற நீங்கள் எல்லோரும் உதவ வேண்டும். இச்சேவையை நீங்கள் மனிதாபிமானத்துடனும், தியாக உணர்வுடனும் செயற்படுத்த வேண்டும். கடமை முடியும் நேரத்திலும் கூட நோயாளிகள் வரலாம். கடமைக்கப்பால் நின்று மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

No comments:

Post a Comment