Monday, April 21, 2014

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதியிலும் நாளை பிரசாரம் ஓய்கிறது கருணாநிதி, ஜெயலலிதா சென்னையில் ஓட்டுவேட்டை!

Monday, April 21, 2014
சென்னை::தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர்  ஜெயலலிதா ஆகியோர் சென்னையில் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூரில் பாஜ தலைவர் அத்வானியும், ராமநாதபுரத்தில் காங்கிரஸ் துணை  தலைவர் ராகுல்காந்தியும் இன்று பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். தமிழகம், புதுச்சேரிக்கு வரும் 24ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இன்னும் 3  நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜ  கூட்டணி, கம்யூனிஸ்ட் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது.

வேட்பாளர் இறுதி பட்டியல் கடந்த 9ம்தேதி வெளியிடப்பட்ட பின்பு பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் அனல்  பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய கட்சிகளின் தலைவர்கள், தமிழக கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகளும் மும்முரமாக பிரசாரத்தில்  ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 4 நாட்களாக சென்னையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு   வருகிறார். அவர் இன்று மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து எம்.எம்.டி.ஏ காலனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.  வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய தொகுதிகளில் நாளை வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார். முதல்வர் ஜெயலலிதா, கடந்த மார்ச்  3ம்தேதி பிரச்சாரத்தை தொடங்கினார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று பொது கூட்டங்களில் பேசினார். கடந்த 2 நாட்களாக சென்னையில் அவர் வேனில் சென்ற பிரசாரம்  செய்து வருகிறார். இன்று அவர் தென்சென்னை தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அனைத்து  தொகுதிகளில் திறந்த வேனில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார். ஒவ்வொரு ஊரிலும் பொதுக்கூட்டங்களிலும் பேசி வருகிறார். காங்கிரஸ்  வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். இதை தொடர்ந்து ராகுல்காந்தி,  இன்று பகல் 12 மணிக்கு ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

பாஜ கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மோடி, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லாம் பிரச்சாரம் செய்தனர். அக்கட்சியின் மூத்த  தலைவரான அத்வானி இன்று வருகிறார். விமானம் மூலம் மதியம் 2மணிக்கு  சென்னை வரும் அவர், ஹெலிகாப்டரில் வேலூரை அடுத்த காட்பாடிக்கு சென்று அங்கு  மாலை 3 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேசுகிறார். பாதுகாப்பு காரணங்களால் அவரது தஞ்சாவூர்  பிரச்சார பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக  பிரச்சாரம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அழைப்பு விடுத்துள்ளார்.

சிவகங்கையில் நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அவரது வருகை இன்னும் உறுதி  செய்யப்படவில்லை. அனல் பறக்கும் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன் பிறகு, பொதுக்கூட்டங்கள், ஊர்வலம், பேரணி எதுவும் நடத்த  முடியாது. எனினும், வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு கேட்பார்கள். மேலும், பூத்சிலிப் கொடுக்கும் பணியில் பல்வேறு கட்சியினரும் ஈடுபடுவார்கள்.  இதற்கிடையே, தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசு ஊழியர்கள தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment