Pages

Thursday, February 6, 2014

மார்ச் மாதத்தின் பின்னர் இலங்கையின் சுதந்திரம் மீண்டும் பறிக்கப்படும்: நாட்டை சீரழிக்கும் செயற்பாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு: குணதாச அமரசேகர!

Thursday, February 06, 2014
இலங்கை::இலங்கை::மார்ச் மாதத்தின் பின்னர் இலங்கையின் சுதந்திரம் மீண்டும் பறிக்கப்படும் . சிங்கள மக்களை அடிமைகளாக்கி நாட்டை சீரழிக்கும் செயற்பாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கண்டு வருகின்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார் .

மேலும் பிரிவினையினை தூண்டும் மன்னார் ஆயரையும் உடனடியாக கைது செய்யவும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உடனடியாக தடை செய்யவும் ஜனாதிபதி உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் . இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இலங்கை இன்று 66 ஆவது சுதந்திர தினத்தினை அடைந்துள்ளது . ஆயினும் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா பேரவையின் தீர்மானத்தின் பின்னர் இலங்கையின் சுதந்திரத்தினை மேலைத்தேய நாடுகளின் மூலம் பறிக்கப்படுவது உறுதியே . இன்று இலங்கையில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் , நிம்மதியாகவும் வாழ்ந்து வருகின்றனர் . இதனை சீர்குலைக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் , சர்வதேச அமைப்புகளும் செயற்பட்டு வருகின்றன . வட மாகாணத்தின் அபிவிருத்திகளையும் , மக்களின் பாதுகாப்பினையும் அரசாங்கமே பெற்றுக்கொடுத்துள்ளது . அதனை கூட்டமைப்பும் , வடமாகாண முதலமைச்சரும் மறந்து விட்டு தேசத்துரோக செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் .

இலங்கையில் தனித்தமிழ் ஈழத்தினை அமைப்பதில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் இன்று சர்வதேச ரீதியில் வெற்றிகண்டுள்ளது . அவர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிராக தமது சூழ்ச்சிகளை சரியாக செய்து கொண்டிருக்கின்றனர் . இதனை அரசாங்கம் தொடர்ந்தும் விட்டு வைக்குமாயின் குறுகிய காலத்திற்குள் நாடு அழிந்து விடும் .

மேலும் இன்று அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து பிரிவினைவாத கட்சிகளும் , அமைப்புகளும் , மதத் தலைவர்களும் இணைந்து விட்டனர் . குறிப்பாக மன்னார் ஆயர் மிகவும் மோசமான தேசத்துரோக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் . நாட்டிற்கு எதிராக செயற்படும் மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பை அரசாங்கம் உடனடியாக கைது செய்ய வேண்டும் .

அதேபோல் பிரிவினை வாதத்தினை தொடர்ந்தும் நாட்டில் வலியுறுத்திக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை உடனடியாக தடை செய்து கூட்டமைப்பு மீதான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் . இலங்கை விடயத்தில் தொடர்ந்தும் சர்வதேசத்தின் தலையீடுகளை எதிர்பார்த்து அச்சப்பட்டு செயற்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை .

சிங்கள மக்களின் நலன்களையாவது ஜனாதிபதி கருத்திற்கொள்ள வேண்டும் . இல்லையேல் மேலைத்தேய சக்திகள் இலங்கையையும் அடிமை நாடாக மாற்றி தமது காரியங்களை இலகுவில் செய்து கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார் .

No comments:

Post a Comment