Wednesday, February 19, 2014

இடைக்கால பட்ஜெட்டிற்கு கருணாநிதி வரவேற்பு; முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு!

Wednesday, February 19, 2014
புதுடில்லி::மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தி.மு.க., தலைவர் வரவேற்றுள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள்:

கருணாநிதி வரவேற்பு:

இடைக்கால பட்ஜெட்டில், எதிர்பார்த்த அளவிற்கு ஏராளமான சலுகைகள் இல்லை. எனினும் ஓரளவிற்கு வரவேற்கத்தக்கது. அரிசிக்கான சேவைவரி ரத்து, கல்விக் கடன் மீதான வட்டியில் சலுகை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. தி.மு.க., மாநாட்டில், 'அரிசிக்கு சேவை வரி விதிக்க கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாட்டில், நான்கு மிகப்பெரிய, சூரிய ஒளித்திட்டங்கள், ஏழு புதிய விமான நிலையங்கள் கட்டுமானம் குறித்த அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.

ஜெ., எதிர்ப்பு:

இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக, நிதி அமைச்சர், அரசின், 10 ஆண்டு கால சாதனைகளை கூற, முயற்சி செய்துள்ளார். இந்த ஆட்சியின், மிகப்பெரிய குறைபாடு மற்றும் திறமையின்மை, லோக்சபாவில் தெரிந்தது. இடைக்கால பட்ஜெட், ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, பல்வேறு திட்டங்கள் மற்றும் வரி குறைப்பு அறிவிப்புகள் ?வளியிடப்பட்டுள்ளன. தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைய, இந்த பட்ஜெட்டில், ஒன்றும் இல்லை.

மன்மோன் சிங், பிரதமர்:

நாட்டின், இன்றைய பொருளாதாரத்தின் உண்மை நிலையை படம் பிடித்துக் காட்டும் விதமாக, பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது, பாராட்டத்தக்கது. கடந்த, 10 ஆண்டுகளில், அரசு செய்த சாதனைகளுக்கு பெருமை அளிக்கும் விஷயமாக, இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. எந்த தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பட்ஜெட்டை தயாரித்ததற்காக, நிதி அமைச்சரை பாராட்டுகிறேன்.

மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்:

லோக்சபா தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதால், அதில் ஆதாயம் அடைவதற்காக, மாயாஜால பட்ஜெட்டை, மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவி காலம், இன்னும் சில மாதங்கள் தான். இந்த பட்ஜெட்டை, அவர்களால் நடைமுறைப்படுத்த முடியாது. ஒரு சிலரை, எப்போதாவது முட்டாளாக்கலாம்; ஆனால், எப்போதுமே முட்டாளாக்க முடியாது. இதை, மத்திய அரசு உணர வேண்டும்.

மாயாவதி, பகுஜன் சமாஜ் தலைவர்:

இது, ஒன்றுக்கும் உதவாத பட்ஜெட். இதில், புதிய விஷயங்கள் எதுவுமே இல்லை. ஐ.மு., கூட்டணி அரசு, 10 ஆண்டுகளாக என்ன செய்ததோ, அதைத் தான், இடைக்கால பட்ஜெட்டில் கூறியுள்ளனர். லோக்சபா தேர்தலை கருத்தில் வைத்து, இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருந்தாலும், இது, அவர்களுக்கு எந்த வகையிலும் பயன் அளிக்கப்போவது இல்லை.

டி.ராஜா, இந்திய கம்யூ., தேசிய செயலர்:

உணவு மற்றும் உரத்துக்கான மானியம், இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இது, தேவையற்ற நடவடிக்கை. இதனால், அடுத்து ஆட்சி அமைக்கப் போகும் அரசு, பல்வேறு சவால்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க
வேண்டியிருக்கும்.

பிரகாஷ் ஜாவடேகர், பா.ஜ., செய்தி தொடர்பாளர்:

இதை, பட்ஜெட் என்று கூற முடியாது. பிரிவு உபசார பட்ஜெட் என்று வேண்டுமானால் கூறலாம். அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ள மத்திய அரசு, பதவியிலிருந்து வெளியேறுவதற்கு முன், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.

No comments:

Post a Comment