Pages

Saturday, February 8, 2014

இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையே தமிழகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவுகளை அமுல்படுத்தவும்: பிரதமர் மன்மோகன் சிங்!

Saturday, February 08, 2014
இலங்கை::இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையே தமிழகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமுல்படுத்தவும், அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்க வேண்டும் எனவும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக தி.மு.க. எம்.பிக்கள் குழுவொன்று இந்தியப் பிரதமரை சந்தித்து உரையாடிய பின்னரே பிரதமர் மன்மோகன் சிங், இவ்வாறு சிவ்சங்கர் மேன னிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை “இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் பிரதமர் மன்மோகன் சிங் புதுடில்லியில் தன்னை சந்தித்த தி.மு.க. எம்.பிக்களிடம் உறுதியை அளித் துள்ளார்.

புதுடில்லியில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் அலுவலகத்தில் மன்மோகன் சிங்கை டி.ஆர். பாலு தலைமையிலான தி.மு.க. எம்.பி.க்கள் குழு வியாழக்கிழமை சந்தித்து மனு ஒன்றை கையளித்தது.

மக்களவை உறுப்பினர்கள் பழனிமாணிக்கம் டி.கே.எஸ். இளங்கோவன் செல்வகணபதி, ஏ.கே.எஸ். விஜயன், வேணுகோபால், தயாநிதி மாறன், தாமரைச் செல்வன் ஈ.ஜி. சுகவனம், ஹெலன் டேவிட்சன், எஸ்.ஆர். ஜெயதுரை வசந்தி ஸ்டான்லி எஸ். தங்கவேலு, ஏ.ஏ. ஜின்னா உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே சென்னையில் கடந்த ஜனவரி 27ம் திகதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் பெப்ரவரி 1ம் திகதி 57 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்றுள்ளதை விளக்கி அவர்கள் பிரதமரிடம் மனு அளித்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியது, “சென்னையில் தமிழக - இலங்கை மீனவர்கள் இடையிலான சந்திப்பு முறையாக நடைபெறவில்லை. அக்கூட்டத்தை தமிழக அரசுதான் ஏற்பாடு செய்ததுபோல ஒரு தோற்றம் மட்டுமே உருவாக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசே நேரடியாக மீனவர்கள் பிரச்சினையில் தலையிட வேண்டும் இரு நாட்டு மீனவர்களையும் மத்திய அரசு முன்னிலையில் பேசச் செய்து தீர்வுக்கு வழிகாண வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இலங்கை கடற்படையால் கைதாகியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொண்டோம்” என்று இளங்கோவன் கூறினார்.

பிரதமர் உத்தரவு

இந்நிலையில் தி.மு.க. எம்.பி.க்களை சந்தித்த பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை நேரில் அழைத்து மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலக உயரதிகாரி கூறுகையில் “நீடித்து வரும் மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மிகவும் முக்கியம்.
 
இது மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய விவகாரம். எனவே இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கவும் ஏற்கெனவே இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமுல்படுத்தவும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சிவ்சங்கர் மேனனை மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment