Pages

Friday, February 7, 2014

40 தொகுதிக்கும் நேர்காணல்: விஜயகாந்த் மவுனம் கலைவது எப்போது?- குழம்பி தவிக்கும் தொண்டர்கள்!

Friday, February 07, 2014
சென்னை::தமிழகத்தில் களை கட்டியிருக்கும் பாராளுமன்ற தேர்தல் களம் மோடியின் வருகையால் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டணி குழப்பங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. 2 கம்யூனிஸ்டு கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு அ.தி.மு.க தேர்தல் களத்தில் தயாராக நிற்கிறது.
 
தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. காங்கிரசை மீண்டும் தி.மு.க. கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இந்த 2 அணிகளுக்கும் சவால் விடுக்கும் வகையில் பா.ஜ.க. தலைமையில் வலிமையான கூட்டணியை அமைக்க அக்கட்சி நிர்வாகிகள் எடுத்த முயற்சிகள் இதுவரை ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளன.
ம.தி.மு.க. கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் அக்கூட்டணியில் சேர்ந்துள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க.வும், பா.ம.கவும் பா.ஜ.க. கூட்டணியில் சேருவது குறித்து இன்னும் முடிவை எடுக்காமலேயே உள்ளன.
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உளுந்தூர் பேட்டையில் நடந்த ஊழல் எதிர்ப்பு மாநாட்டில், பா.ஜ.க கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தொண்டர்களை கையை தூக்கி சொல்லி கருத்து கேட்ட விஜயகாந்த் கூட்டணி வேண்டாம் என்று, தொண்டர்கள் கூறிவிட்டார்கள். அதே நேரத்தில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள் என்றும் கூறினார். இதனால் ஏமாற்றமே மிஞ்சியது.
 
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.
கூட்டணியா? தனித்து போட்டியா? என்கிற அறிவிப்பை வெளியிடாமல் விஜயகாந்த் 40 தொகுதிகளுக்கும் நேர்காணல் தேதியை அறிவித்திருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை அதிகரித்துள்ளது.
 
தலைவர் என்ன நினைக்கிறார் என்பது தெரியவில்லையே? என அக்கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் உச்சக்கட்ட குழப்பதில் ஆழந்துள்ளனர்.
எனவே மவுனத்தை கலைத்து விஜயகாந்த் தனது முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதே தே.மு.தி.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment