Pages

Monday, February 17, 2014

திருச்சியில் தி.மு.க., மாநாடு : ரூ.10 கோடிக்கு மது விற்பனை!!

Monday, February 17, 2014
திருச்சி::தி.மு.க., மாநாட்டை முன்னிட்டு, இரண்டு நாட்களில், திருச்சியில், 10 கோடி ரூபாய்க்கு, "டாஸ்மாக்' மது பானங்கள் விற்பனையாகி உள்ளன. இதை, குவாட்டர் அளவில் கணக்கிட்டால், 12.5 லட்சம் மது பாட்டில்களுக்கு சமம். தமிழகத்தில், 6,838 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், அரசு நிர்ணய விலையில் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. லோக்சபா தேர்தல் நெருங்குவதை அடுத்து, அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், மாநாடுகளை நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
 
தமிழகத்தில் முக்கிய கட்சியான தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு திருச்சியில் இருந்து, ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள, பிராட்டியூரில், நேற்றும், நேற்று முன்தினமும் நடந்தது. இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், வெள்ளிக்கிழமை முதலே, பெரும் திரளான தொண்டர்கள் திருச்சியில் குவியத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை முதல் தொண்டர்கள் திருச்சியில் குவியத் தொடங்கினர். திருச்சி மாவட்டத்தில், 231 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் சராசரியாக, ஒரு கோடி ரூபாய்க்கும், சனி, ஞாயிறுகளில், 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாவது வழக்கம். தி.மு.க., மாநாட்டை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை 1.5 கோடி ரூபாய்; சனிக்கிழமை 3.5 கோடி ரூபாய், நேற்று 5 கோடி ரூபாய் என, மொத்தம், 10 கோடி ரூபாய் மதிப்பிலான மது பானங்கள் விற்றுள்ளன. குவாட்டர் பாட்டில் அளவில் கணக்கிட்டால், 12.5 லட்சம் குவாட்டர் பாட்டில்களுக்கு சமம்.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தி.மு.க., மாநாட்டை முன்னிட்டு இரு தினங்களில் மட்டும், 15 கோடி ரூபாய்க்கு மது பானங்கள் விற்கும் என, கணக்கிடப்பட்டது. இதற்காக, மற்ற மாவட்டங்களில் இருந்து சரக்குகளை கொள்முதல் செய்து, திருச்சியில் உள்ள கடைகளில் முன் கூட்டியே இருப்பு வைக்க மண்டல, மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாநாட்டுக்கு வந்த வாகனங்களை, திருச்சி நகருக்குள் நுழைய விடாமல், பைபாஸ் சாலை வழியாக மாநாடு நடந்த இடத்துக்கு, போலீசார் திருப்பி அனுப்பினர். முதல் நாள் நிகழ்ச்சி முடிந்து, திருச்சியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கியவர்கள், இரவு, 10:00 மணிக்கு மேல் கடைகள் மூடப்பட்டதால், சரக்கு கிடைக்காமல் திண்டாடினர். இதனால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை. 10 கோடி ரூபாய் அளவுக்குதான் விற்றுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

2 நாளில் ரூ.212 கோடி விற்பனை : தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், நாள்தோறும், 67 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில், 90 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகும். தி.மு.க., மாநாட்டை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாநாட்டுக்குச் சென்றவர்கள், வண்டிகளில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி குவிந்து வந்தனர். இதனால், சனிக்கிழமை அன்று, சென்னை மண்டலம்30 கோடி ரூபாய்; திருச்சி மண்டலம்20 கோடி ரூபாய்; மதுரை மண்டலம்23 கோடி ரூபாய்; கோவை17 கோடி ரூபாய் மற்றும் சேலம்20 கோடி ரூபாய் என, மொத்தம் 110 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றுள்ளன. ஞாயிறு அன்று (நேற்று), சென்னை மண்டலம் 25 கோடி ரூபாய்; திருச்சி 22 கோடி ரூபாய், மதுரை21 கோடி ரூபாய்; கோவை16 கோடி ரூபாய்; சேலம் 18 கோடி ரூபாய் என, 102 கோடி ரூபாய் விற்பனை ஆனது. இரண்டு நாட்களில், தமிழகம் முழுவதும், 212 கோடி ரூபாய்க்கு, மது பானங்கள் விற்றுள்ளன.

No comments:

Post a Comment