Wednesday, January 22, 2014

இலங்கைக்கு போர் கப்பல்களை விற்கவில்லை!: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்!

Wednesday, January 22, 2014
மதுரை::இலங்கைக்கு, போர்க் கப்பல்களை இந்தியா விற்பனை செய்யவில்லை; ரோந்து கப்பல்களை விற்கத்தான், ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது' என, மத்திய அரசு, மதுரை ஐகோர்ட் கிளையில் பதில் மனு செய்தது.
இலங்கைக்கு ஒத்துழைப்பா? மேலூர் வழக்கறிஞர், ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல மனு: இந்திய அரசு, இரு போர்க் கப்பல்களை இலங்கைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. போர்க் கப்பல்களை விற்றால், இலங்கையின் செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பதாக அமையும். போர்க் கப்பல்கள் விற்பனை செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தி, மத்திய கேபினட் செயலர், மாநில தலைமைச் செயலருக்கு மனு அளித்தேன். இலங்கைக்கு, போர்க்கப்பல்களை விற்க, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள், ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி, 'பெஞ்ச்' முன், மனு விசாரணைக்கு வந்தது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின், இலங்கைக்கான துணைச் செயலர் மயானக் ஜோஷி தாக்கல் செய்த பதில் மனு: கோவா, 'ஷிப் யார்டு' (ஜி.எஸ்.எல்.,) நிறுவனத்திற்கும், இலங்கை அரசிற்கும் இடையே, வணிக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இலங்கைக்கு இரு ரோந்து கப்பல்களை தயாரிக்கும் பணியில், கோவா நிறுவனம் ஈடுபட்டுள்ளது; அவை, ஆயுதக் கப்பல்கள் அல்ல. எதிரி களின் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான ஆயுதங்கள் மட்டும் இருக்கும். கப்பல் தயாரிப்பதற்கான ஒப்பந்த மதிப்பு, 100 மில்லியன் டாலர். ஒப்பந்தத்தால், இந்தியாவின் கவுரவம், சர்வதேச அளவில் உயரும். இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் ரோந்து சென்றபோது, இந்திய கடல் எல்லையில், துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் இல்லை. 2011 ஏப்ரலிலிருந்து, இந்திய மீனவர்கள் யாரையும், இலங்கை கடற்படை சுட்டுக் கொல்லவில்லை.

மனிதாபிமான அடிப்படை:

சர்வதேச கடல் எல்லையை தாண்டக் கூடாது என, தமிழக மீனவர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். மீறி தவறுதலாகச் செல்லும் மீனவர்களை, மனிதாபிமான அடிப்படையில் நடத்துமாறு, இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு, பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விசாரணையை, ஜன., 22க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment