Pages

Sunday, January 5, 2014

விஜயகாந்துக்கு சால்வை, மாலை அணிவிக்க தடை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தேமுதிக பொதுக்குழு கூடுகிறது!

Sunday, 05, January, 2014
சென்னை::விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலை சந்திக்கும் வகையில் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளன. தமிழகத்திலும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முடிவுகளை அறிவித்து வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது. தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்  (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி  சின்னம்பேடில் உள்ள எல்.கே.எஸ்.கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. இதில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட அவைத் தலைவர்கள், மாவட்ட பொருளாளர், மாவட்ட துணை செயலாளர், மாவட்ட மகளிர் அணி செயலாளர், மகளிர் அணி துணை செயலாளர்கள் ஆகியோர் மட்டும் பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்குரிய அடையாள அட்டையுடன் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்குரிய அடையாள அட்டை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் இருந்து உடனடியாக பெற்று கொள்ள வேண்டும். மேலும், கூட்டத்தில் பங்கேற்கும் மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக அழைத்து கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் மட்டுமே அமர வேண்டும்.

தேமுதிக தொண்டர் அணியினரின் வழிகாட்டுதல்படி கூட்டத்திற்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். எவ்வித காரணம் கொண்டும் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு அடையாள அட்டை இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன், கேமரா போன்ற எந்தவிதமான எலக்ட்ரானிக் சாதனங்களும் உள்ளே கொண்டு வர கண்டிப்பாக அனுமதி கிடையாது.

கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் யாரும் கட்சி தலைவர் விஜயகாந்துக்கு சால்வையோ, மாலையோ, பூங்கொத்தோ அளிக்கவேண்டாம் என்று அன்பு கட்டளையிட்டுள்ளார். எனவே, எவ்வித காரணம் கொண்டும் அதற்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த நிலையில் தேமுதிக பொதுக்குழு கூடுவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எக்ஸ்ட்ரா தகவல்

1978ல் நடிகராக வாழ்க்கையை தொடங்கிய விஜயகாந்த் 2005 செப்டம்பர் 14ம்தேதி தேமுதிகவை மதுரையில் தொடங்கினார்.
 

No comments:

Post a Comment