Thursday, January 16, 2014

யாழ்ப்பாணம் - மன்னார் ஆயர்களை உடன் கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் இராவணா பலய அமைப்பு கோரிக்கை!

Thursday, January 16, 2014  
இலங்கை::யாழ்ப்பாணம் -  மன்னார் ஆயர்களை உடன் கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் இராவணா பலய அமைப்பு கோரிக்கை:-

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில், இலங்கை அரசாங்கம் போர்க் குற்றங்கள் மேற்கொண்டதாக அமெரிக்காவின் விசேட தூதராக இலண்கை சென்ற ஸ்டீபன் ஜே ரெப் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகளிடம் பொய்யான தகவல்களை மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்கள் வழங்கியுள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் இராவணா பலய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஏதிர்வரும் மார்ச் மாத ஜெனீவா செயலமர்வை இலக்கு வைத்து, இலங்கைக்கு பயணித்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ரெப்,  யாழ் மன்னார் ஆயர்களுடன் விசேட சந்திப்பையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்ட போது, பொய்யான தகவல்களை வழங்கியுள்ளனர் என்றும், இராவணா பலய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

'இலங்கைக்கு எதிராக போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டீபர் ரெப் வெளியிட்ட கருத்தை நாம் மிகவும் கடுமையாகக் கண்டிக்கின்றோம்' என்று குறிப்பிட்டுள்ள இராவணா பலய, 'மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் வழங்கிய பொய்யான தகவல்களின் அடிப்படையிலேயே ஸ்டீபன் ரெப் தனது  கருத்தை வெளியிட்டுள்ளார்' என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

'எனவே, மேற்படி ஆயர்கள் இருவரையும் கைது செய்ய பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய இத்தகந்தே சத்தாதிஸ்த தேரர் வலியுறுத்தி உள்ளார்.

ஏற்கனவே பௌத்த கடும் போக்காளர்களும், அமைப்புக்களும் மன்னார் ஆயரை புலிகளின் தலைவராக பெயர் சூட்டி இருந்தமையும், யாழ் மன்னார் ஆயர்கள் புலிகள் அவர்களின் ஆதரவாளர்கள் என்றெல்வாம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment