Pages

Sunday, January 19, 2014

61 இலங்கை மீனவர்கள் விடுதலை: ராமநாதபுரம் கோர்ட்டு!

Sunday,January,19, 2014
ராமநாதபுரம்::சென்னை சிறையில் உள்ள 61 இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்து ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த பேஸ்கர்பிடோ உள்பட 26பேர் கடந்த அக்டோபர் 9-ந் தேதி இந்திய கடல் எல்லை தாண்டி வந்ததாக கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதேபோல, இலங்கை நீர்க்கொழும்பு பகுதியை சேர்ந்த குமார்வாஸ் உள்பட 5பேர் கடந்த செப்டம்பர் 18-ந் தேதியும், இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த அனில்டென்சில்பெர்னாண்டோ உள்பட 24பேர் கடந்த அக்டோபர் 30-ந் தேதியும், இலங்கை கல்துறை குருகுலசூர்ய பட்டபெந்தகே மெரில்தில்வா உள்பட 4பேர் கடந்த நவம்பர் 6-ந் தேதியும் எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகமொத்தம் இலங்கை மீனவர்கள் 59பேர் சென்னை புழல் ராமநாதபுரம் முதன்மை கோர்ட்டு உத்தரவுப்படி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, கடந்த அண்டு ஜுலை மாதம் எல்லை தாண்டி வந்ததாக ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரை பகுதியில் இலங்கையை சேர்ந்த வர்ணகுல சூர்ய ஜெலஸ்டின் ஜெரோன்மணி உள்பட 2பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது இருநாட்டு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு சென்னையில் நாளை(20-ந்தேதி) மீனவர் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து முன்னதாக இலங்கை மற்றும் தமிழக சிறைகளில் உள்ள இருநாட்டு மீனவர்களை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இருநாட்டு சிறைகளில் உள்ள மீனவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ராமநாதபுரம் முதன்மை கோர்ட்டு உத்தரவின்படி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேற்கண்ட 59 மீனவர்களையும் அரசின் வேண்டுகோளை ஏற்று நீதிபதி (பொறுப்பு) மோகன்ராம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். இதேபோல, ராமேசுவரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு உத்தரவின்படி சென்னை புழல் சிறையில் உள்ள 2மீனவர்களையும் நீதிபதி சரவணக்குமார் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த இரண்டு உத்தரவுகளும் சென்னை புழல் சிறை அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளின் அடிப்படையில் சென்னை புழல் சிறையில்  அடைக்கப்பட்டுள்ள 61 மீனவர்களும் விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment