Tuesday, January 14, 2014
சென்னை::முதல்வர் ஜெயலலிதாவின் துரித நடவடிக்கையால் யாழ்பாண
சிறையில் இருந்த 52 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_
தமிழக மீனவர்கள் கடல் எல்லையை கடந்து மீன் பிடிப்பதாகக் குற்றம்
சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போது பிரதமருக்கு
உடனுக்குடன் கடிதங்கள் எழுதி தூதரக நடவடிக்கைகள் மூலம் அவர்களை மீட்க
முதல்வர் ஜெயலலிதா துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் காரணமாக,
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை
பிடிக்கப்பட்டபோதும், 836 மீனவர்கள் துரிதமாக விடுவிக்கப்பட்டு
இருக்கிறார்கள். இன்னமும், 275 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர்.
தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பினை
ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மீனவச் சங்கங்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம்
கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், 2013_ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரு
நாடுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையினை சென்னையில்
வைத்துக் கொள்ளலாம் என்றும், இதற்குத் தேவையான அனுமதியினை அளிக்க
சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்குமாறும் இலங்கை மீனவர்கள் சார்பில்
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறும்
கேட்டுக்கொண்டு பிரதமருக்கு 20.9.2013 அன்று கடிதம் ஒன்றை முதல்வர்
ஜெயலலிதா அனுப்பியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மமுதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தமிழ்நாடு
அரசு தனது 23.12.2013 நாளிட்ட கடிதத்தில், இரு நாட்டு மீனவர்கள் கூட்டத்தை
சென்னையில் ஜனவரி மாதம் 20_ந் தேதி வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்து,
அந்தக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் கூட்டத்தில் கலந்து
கொள்வோர் விவரப் பட்டியலை அனுப்பி வைத்தது.
முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் 20.1.2014 அன்று சென்னையில்
நடைபெறவுள்ள இரு நாட்டு மீனவர்கள் கூட்டம் தொடர்பாக தமிழக மீன்வளத் துறை
செயலாளர், இந்திய அரசு அதிகாரிகளுடன் புது தில்லியில் விவாதித்தார்.
அப்போது இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இந்தக்
கூட்டத்திற்கு முன்பு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என
தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், இலங்கை
சிறையில் வாடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை 13.1.2014 முதல்
விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்குமென தெரிவித்த மத்திய
அரசு தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 179 இலங்கை மீனவர்களை
விடுவிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக்
கொண்டது. அதன்படி, தமிழக சிறையிலுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான
நடவடிக்கைகளை துவக்குமாறு மமுதல்வர் ஜெயலலிதா 11.1.2014 அன்று
உத்தரவிட்டார்.
முதல்வர் ஜெயலலிதா முயற்சியின் பயனாக 21.11.2013 அன்று கைது
செய்யப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டையைச்
சேர்ந்த 20 மீனவர்கள் மல்லாகம் நீதிமன்றம் மூலம் நேற்று (13.1.2014)
பிற்பகல் விடுவிக்கப்பட்டனர். அதனடிப்படையில், புழல் சிறையில் உள்ள 20
இலங்கை மீனவர்களை விடுவிக்க தலைமைப் பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்
மூலம் உத்தரவு பெறப்பட்டுள்ளது. மேலும், 17.10.2013 அன்று காரைக்கால்
பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற காரைக்காலைச் சேர்ந்த 22 மீனவர்கள்
மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் என திரிகோணமலை சிறையில்
அடைக்கப்பட்டுள்ள 32 மீனவர்கள் நேற்று (13.1.2014) மாலை திரிகோணமலை
நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதனடிப்படையில், புழல் சிறையில் உள்ள
32 இலங்கை மீனவர்களை விடுவிக்க தலைமை பெருநகர் குற்றவியல் நடுவர்
நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டுள்ளது. அதாவது, இலங்கை சிறையில் உள்ள
தமிழக மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 52 மீனவர்கள் இலங்கை
நீதிமன்றத்தால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர், அதேபோன்று தமிழக
சிறையிலுள்ள 52 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர்
ஜெயலலிதா உத்தரவுக்கு இணங்க, தமிழக மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து
விடுவிப்பதற்கு ஏற்ப தமிழக அரசும் புழல் சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை
விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment