Pages

Monday, January 6, 2014

ஜிஎஸ்எல்வி டி5 வெற்றி ஜிசாட் செயற்கைக்கோள் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது!

Monday, January 06, 2014
சென்னை::இந்தியாவில் தயாரான கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட் நேற்று மாலை 4.18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
 
இதிலிருந்து பிரிந்த ஜிசாட்-14 செயற்கைக்கோளின் புவிவட்ட சுற்றுப்பாதை இன்று உயர்த்தப்பட்டது. சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று மாலை 4.18 மணிக்கு ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 1982 கிலோ எடை கொண்ட ஜிசாட்-14 என்ற தொலைத்தொடர்பு செயற்கோளை இந்த ராக்கெட்  சுமந்து சென்று விண்ணில் செலுத்தியது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து 17 நிமிடம் 8 வினாடிகளில் ராக்கெட்டிலிருந்து ஜிசாட்-14 செயற்கோள் தனியே பிரிந்து புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இந்த ஜிசாட்-14 செயற்கைகோளானது கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட எஜூசாட் என்ற செயற்கோளுக்கு மாறாக
செலுத்தப்பட்டுள்ளது. எஜூசாட்டின் பணிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைவதால், அதற்கு மாறாக தற்போது ஜிசாட்-14 விண்ணில்
செலுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் ரூ.193 கோடியிலும், செயற்கைக்கோள் ரூ.45 கோடியிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக மொத்தம் ரூ.315 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி-டி5, இந்தரக ராக்கெட்டுகளில் 8வது ராக்கெட் ஆகும். இதில்தான், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
 
 இதன்மூலம், கிரையோஜெனிக் தொழில்நுட்பம் பயன்படுத்தும் 6வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஏற்கனவே ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ளன. இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘நமது விஞ்ஞானிகளின் 20 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இதனை தொடர்ந்து, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிசாட் 6,7,8,9, செயற்கைக்கோள்கள்
விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

சந்திரயான்-2 திட்டத்தின் கீழ் நிலாவுக்கு அனுப்பவுள்ள ரோவர் விண்கலத்தை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன‘ என்றார். 
இந்நிலையில், ஜிசாட் செயற்கைக்கோளின் புவி வட்டப்பாதை இன்று காலை 7.58 மணிக்கு ஒரு நிலை உயர்த்தப்பட்டது. எந்த பிரச்னையுமின்றி
வெற்றிகரமாக சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டதை விஞ்ஞானிகள், இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்தபடி கண்காணித்தனர். இதைத் தொடர்ந்து,
செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை நாளை மேலும் 2 நிலைகள் உயர்த்தப்பட உள்ளன.

No comments:

Post a Comment