Pages

Tuesday, December 17, 2013

சீக்கியர் கலவரம் தொடர்பாக விளக்கம் அளிக்க சோனியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் கெடு!

Tuesday, December 17, 2013
நியூயார்க்::டில்லியில், '84ல், முன்னாள் பிரதமர், இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. இதில், நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழி செய்யும் படி, அமெரிக்காவில் உள்ள சீக்கிய உரிமை அமைப்பு போராடி வருகிறது. இந்திய தலைவர்களுக்கு எதிராக, இந்த அமைப்பு, அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளது.
 
காங்., தலைவர் சோனியா, செப்டம்பர் மாதம், மருத்துவ சிகிச்சைக்காக, அமெரிக்கா சென்றார். சீக்கிய உரிமை அமைப்பினர், சோனியா மீதும், நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். "கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு, சோனியா பாதுகாப்பு அளித்து வருகிறார்; இதற்காக, சோனியா தண்டிக்கப்பட வேண்டும்; கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் இழப்பீடு தர வேண்டும்' என, இந்த அமைப்பு, மனுவில் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, நியூயார்க் நீதிமன்றம், சோனியாவுக்கு சம்மன் அனுப்பியது. சோனியாவுக்கு இந்த சம்மன் கிடைப்பதற்கு முன்னதாக, அவர், டில்லி திரும்பி விட்டார். இதையடுத்து, சோனியா சிகிச்சை பெற்ற, நியூயார்க்கில் உள்ள, "ஸ்லோயன்கெட்டரிங்' மருத்துவமனையில் சம்மன் அளிக்கப்பட்டது.
 
ஆனால், மருத்துவமனை நிர்வாகம், இந்த சம்மனை பெற மறுத்து விட்டது.இது தொடர்பாக, சீக்கிய உரிமை அமைப்பு, நியூயார்க் நீதிமன்றத்தில் புகார் செய்தது. இந்த புகாரை விசாரித்த, நீதிமன்றம், "சோனியாவுக்கு அளிக்கப்பட்ட சம்மன் தொடர்பாக, அவர், அடுத்த மாதம், 2ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.

டில்லியில், சீக்கியர்களுக்கு எதிராக நடந்த, கலவரத்தில் ஈடுபட்ட தலைவர்களை பாதுகாப்பதாக கூறி, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, அமெரிக்க கோர்ட் அனுப்பிய நோட்டீசுக்கு, விளக்கம் அளிக்கும் படி, கோரப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment