Pages

Tuesday, December 17, 2013

தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மீனவர் ஐக்கிய முன்னணியினர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

Tuesday, December 17, 2013
புதுடெல்லி::தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்தும், அவர்களுடைய படகுகளை பறிமுதல் செய்தும் வருகிறார்கள். இவ்வாறு நூற்றுக்கணக்கான மீனவர்கள் அங்குள்ள சிறைகளில் வாடி வருகிறார்கள். இவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி மீனவ சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர் ஐக்கிய முன்னணி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மீனவர் ஐக்கிய முன்னணி தலைவர் ஜி.ஆர்.அப்பாராஜ் தலைமை தாங்கி பேசினார். அவர் கூறுகையில், “இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக, புதுவை மீனவர்களின் விசைப்படகுகள், மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றை உடனே மீட்க வேண்டும். இலங்கை கடற்படையினரின் தாக்குதலை நிரந்தரமாக தடுத்து நிறுத்தவும், கச்சத்தீவை மீட்கவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காகா கலேல்கர் குழு, லோக்குர் குழு, மண்டல் குழுவினர் பரிந்துரைப்படி, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்றார்.

மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் மூத்த மந்திரிகளை, மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய மீனவர் சங்கத்தலைவர் கஜேந்திர பான்ஜி, பொதுச்செயலாளர் டாக்டர் தோமர், மைக்கேல் பெர்னாண்டோ, இரா.மங்கையர் செல்வன், ஏ.ஆர்.வேலவன், நாடாளுமன்ற உறுப்பினர் கேப்டன் ஜெய்நாராயண் பிரசாத் நிஷாத்ஜி மற்றும் துபாணி நிஷாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, பீகார், ஒடிசா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து மீனவர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment