Pages

Thursday, November 7, 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடைபெறும் காலப்பகுதியில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடாத்த இடமளிக்கப்பட மாட்டாது: அரசாங்கம்!

Thursday, November 07, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடைபெறும் காலப்பகுதியில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடாத்த இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது சில நாடுகளின் தலைவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் அமர்வுகளின் போது ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடாத்த அனுமதியளிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் அல்லது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகத் தலைவர்கள் பயணம் செய்யும் பாதைகள், தங்கியிருக்கும் ஹோட்டல்கள் மற்றும் பயணம் செய்யும் இடங்களில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

2010 மற்றும் 2012ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனுக்கு விஜயம் செய்திருந்த போது எதிர்நோக்கிய அசௌகரியங்கள் வேறும் நாட்டுத் தலைவர்களுக்கு ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதியின் விஜயத்திற்க எதிராக புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமர்வுகளின் போது புறச் சக்திகளின் தலையீடு குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருவதனால் அவ்வாறான நாடுகளின் தலைவர்களுக்கு எதிராக போராட்டங்களை நடாத்த புறச் சக்திகள் இலங்கையை களமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அமர்வுகள் நடைபெறும் காலத்தில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு இடமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment