Tuesday, November 5, 2013

இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்பதனால் விபரீதங்கள் ஏற்படலாம்: ரொஷான் பெர்ணான்டோ!

Tuesday, November 05, 2013
இலங்கை::தமிழ் நாட்டு கடற்றொழிலாளர் எமது கடல் எல்லைக்குள் புகுந்து மீன்களை பிடித்து வருவதனால் இலங்கைக்கு வருடாந்தம் 750 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கைப் பணத்தில் 97 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகிறதென்று இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ரொஷான் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

1974ம் ஆண்டில் இலங்கையும் இந்தியாவும் ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்திய சர்வதேச கடல் எல்லை உடன்பாட்டை மீறியே இந்திய மீனவர்கள் இங்கு வந்து மீன்களைப் பிடித்து வருகிறார்கள்.
வாரத்திற்கு ஒரு நாள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன் பிடிப்பதற்கு தமிழ் நாட்டு மீனவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்ற இந்தியாவின் யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் மூலம் இந்த யோசனை கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் அவரது அமைச்சு அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது.

இதுபற்றி கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் நேற்றுக் காலை நாம் வினவிய போது, எக்காரணம் கொண்டும் ஒரு நாள் கூட தமிழ்நாட்டு மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் இடமளிக்காது என்று தெரிவித்தார்.

இலங்கைக்குச் சொந்தமான சர்வதேச கடல் எல்லைக்குள் இந்திய மீன்பிடிப் படகுகள் அத்துமீறி பிரவேசித்தால் அப்படகுகளை எமது கடற்படையினர் கைப்பற்றி அம்மீனவர்களை எமது நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு எதிராக சட்டபூர்வமான தண்டனைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இத்தகைய அச்சுறுத்தல்களை இலங்கை அரசாங்கம் விடுத்தாலும் தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்களின் சக்தி வாய்ந்த பெரிய இழுவைக் கப்பல்களும் எங்கள் நாட்டின் கடல் எல்லைக்குள் வாரத்தில் மூன்று நாட்களாவது அத்துமீறி பிரவேசித்து எமது நாட்டு மீனவர்களுக்குச் சொந்தமான மீன்வளத்தை கொள்ளையிட்டுச் செல்வதுடன் இழுவைக் கப்பல்களின் சிறிய துளைகளையுடைய வலைகளில் மீன் குஞ்சுகளும் அகப்பட்டு பரிதாபமாக மரணிக் கின்றன.

இவற்றை ஆபத்தின்றி வளர்ப்பதற்கு இடமளித்தால் சுமார் ஒருமாத காலத்தில் பெரிய மீன்களாக வளர்ந்துவிடும் என்பதை தெரிந்திருந்தும் கூட, இந்திய மீனவர்கள் சுயநலப் போக்கில் நடந்து கொள்கிறார்கள் என்று கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் தாங்கள் அத்துமீறி பிரவேசிக்கும் நாட்களில் இலங்கை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென்று அச்சுறுத்தி வருகிறார்கள். இத்தகைய முறைப்பாடுகளை அடுத்தே கடற்றொழில் அமைச்சு இந்திய மீனவர்களுக்கு எமது கடல் எல்லைக் குள் பிரவேசிப்பதை அனுமதிப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தது.

கடந்த மாத பிற்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடனும் வடபகுதியில் உள்ள மீனவர்களுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும், வடமாகாணசபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுடனும், யாழ்ப்பாணத்தில் இந்தப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று கேட்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் இந்தி யாவின் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது நம்நாட்டு மீனவர் கள் அந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டு மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அதேவேளையில் இந்திய மீனவர்களின் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணியப் போவதில்லை என்ற எண்ணத்துடன் இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் எடுத்துள்ள இந்த தீர்மானத்தை அனைவரும் பாராட்டு கிறார்கள்.

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை கடல் எல்லைக்குள் ஊடுருவ வேண்டாம் என்று தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தாலும் அவ்வேண்டுகோளை உதாசீனம் செய்யுமாறு தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதியும் தமிழ்நாட்டு மீனவர்களை தங்கள் அரசியல் இலாபத்தை கருத்திற் கொண்டு ஆதரவளித்து வருவதனால் தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சர்ச்சையை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகரிக்கும் ஆபத்து ஏற் படலாம் என்று அரசியல் அவதானிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் இந்திய காங்கிரஸ் கட்சியே தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது. அப்போது காமராஜர் போன்ற இந்தியாவின் தேசியத் தலைவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச் சர்களாக இருந்தார்கள். அவர்கள் என்றுமே பிராந்திய ரீதியில் தமிழ் நாட்டை மாத்திரம் பற்றி சிந்திக்காமல் இந்தியர்கள் என்ற உணர்வுடன் நாட்டுப்பற்றுடன் செயற்பட்டார்கள்.
1960ம் ஆண்டு தசாப்தத்தில் இந்திய எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து தமிழ் நாட்டில் அறிஞர் அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதன் மூலம் மக்கள் ஆதரவைப் பெற்று முதல் தடவையாக தமிழ் நாட்டின் வரலாற்றில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து திராவிட முன்னேற்றக் கழகம் அதிகாரத்தைக் கைப்பற்றியதனால் அறிஞர் அண்ணாதுரை முதலமைச்சரானார்.

அறிஞர் அண்ணாதுரை பிரதேச வாதத்தை கடைப்பிடிக்காத தேசியத் தலைவராக விளங்கிய போதிலும் அவரது மறைவுக்கு பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய கலைஞர் கருணாநிதியும், புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனும் தேசிய ரீதியில் சிந்திக்காமல் தமிழ் நாட்டில் தங்கள் கட்சியை அதிகாரத்தில் வைத்திருப்பதற்காகவே அரசியல் நடத்தினார்கள்.
ஊழல் காரணமாக கலைஞர் கருணாநிதியின் கட்சி மக்கள் ஆதரவை இழந்த போது அதிகாரத்தைக் கைப்பற்றிய எம்.ஜி. ராமச்சந்திரன் தன்னை தமிழர்களின் தன்னிகரற்ற தலைவராக விளங்கச் செய்வதற்காக அன்று பலமின்றி இருந்த எல்.ரி.ரி.ஈ. இயக்கத்திற்கு ஆயுதங்களை வாங்குவதற்காக முதல் தடவையாக 500 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்தார்.

இதையடுத்து இடம்பெற்ற நிகழ்வுகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தின என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மீண்டும் தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவும், கலைஞர் கருணாநிதியும் இவ்விதம் குறுகிய மனப் பான்மையுடன் சிந்திப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment