Monday, November 11, 2013

பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டிற்காக பல நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச தலைவர்கள் இலங்கை வந்தடைந்துள்ளனர்!

Monday, November 11, 2013
இலங்கை::பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டிற்காக பல நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச தலைவர்கள் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி பகாமாஸ், பபுவா நியுகினியா, மாலே, தன்சானியா, சென் லூசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, காலி நீதிமன்ற சதுக்கத்தில் ஆரம்பமான பொதுநலவாய மக்கள் மன்ற மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வு இன்றாகும்.

இரண்டு வருடங்களுக்கொருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில் இலங்கை மற்றும் பொதுநலவாய நாடுகளின் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிவில் சமூகத்தினர் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்வர்.

மக்கள் மன்ற மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் இன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகி இரவு 7.30க்கு முடிவடையவுள்ளது.

2005 ஆம் ஆண்டிற்கு பின்னரான அபிவிருத்திக் கட்டமைப்பில் சிவில் சமூகத்தின் பங்கு என்ற தலைப்பில் டொக்டர் ஜமீலா முஹம்மத் விசேட உரை நிகழ்த்தவுள்ளதுடன், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியாக வந்துள்ள உயர்மட்டக் குழுவின் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

இதுதவிர தொழில் வாய்ப்பு மற்றும் சந்தர்ப்பங்கள், மகளிர் சமூக பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய தலைப்புகளிலும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு வர்த்தக கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.

நேற்று ஆரம்பமான பொதுநலவாய 9வது இளைஞர் மாநாடு மற்றும் பொதுநலவாய மக்கள் மாநாடு ஆகிய இரண்டு மாநாடுகளும் எதிர்வரும் 14ம் திகதி நிறைவடையவுள்ளன.

No comments:

Post a Comment