Wednesday, November 6, 2013

கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்கு அதிக பங்களிப்பு செய்வோம்; நஸீர் அஹமதிடம் அமெரிக்க தூதுவர் உறுதி!

Wednesday, November 06, 2013
இலங்கை::கடந்த காலத்தில் இலங்கையி;ல் நடைபெற்ற பயங்கரவாத யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அமெரிக்க அரசாங்கம் தன்னாலான தொழில்நுட்ப உதவிகளையும் தனியார் துறைப் பங்களிப்பையும் தொடர்ந்து மேற்கொண்டிருப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே சிசன் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களிடம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி, உற்பத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களிற்கும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே சிசன் இற்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது அமைச்சரோடு அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் ஞானசேகரம், அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் சமந்த அபேவிக்கிரம அவர்களும் அமெரிக்க தூதுவராலயத்தின் சார்பில் தூதுவரோடு இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையிலான அமெரிக்க திட்டப் பணிப்பாளர் செரி எச்.காளின் மற்றும் அரசியல் பொருளாதார பிரிவின் பணிப்பாளர்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்:-
கிழக்கு மாகாண சபையால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி முன்னெடுப்புகள் மக்களின் வாழ்வாதார உதவிகள், வறுமை ஒழிப்பு, சிறு கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பாக அமைச்சின் கீழுள்ள வேலைத் திட்டங்களை தெளிவுபடுத்தி கூறியதோடு எதிர்காலத்தில் அமெரிக்கா தனது தொழில்நுட்ப உதவிகளையும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தனியார் துறையின் பங்களிப்பு முக்கியம் எனவும் இதற்கு அமெரிக்கா உதவ வேண்டுமெனவும் தூதுவரிடம் கேட்டுக் கொண்டதொடு விரைவில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யுமாறும் தூதுவரிடம் அழைப்பு விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அமெரிக்க தூதுவர் ஏற்கனவே அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் அழைப்பிற்கிணங்க ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்து நேரடியாக மாவட்டத்தின் நிலைமைகளை அவதானித்ததை நினைவு கூர்ந்ததோடு கிழக்கு மாகாண மக்களின் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அபிவிருத்தியை மேற்கொள்ளவும் தான் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் கடந்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பை மேலும் அதிகமாக வழங்குவதற்கு தான் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

மேலும் கிழக்கு மாகாணத்தின் விவசாயம்,கைத்தொழில் அபிவிருத்தி உல்லாச பயணத்துறை, மீன் பிடித்துறை போன்றவற்றிற்கு சிறந்த இடம் என்றும் தான் இதை நேரடியாக கவனித்ததாகவும் அமைச்சரிடம் எடுத்துக் கூறினார்.

அமெரிக்க அரசாங்கம் ஏற்கனவே வடகிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கியுள்ளதாகவும் இது கிழக்கு மாகாணத்திற்கும் அதிக நன்மை அளிக்குமென்றும் தான் மேலும் பல உதவிகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களிடம் உறுதியளித்தார்.

இரண்டு மணித்தியாலயத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் முடிவில் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள முதலீட்டுத் திட்டங்களின் மும்மொழிவுகளையும் அமெரிக்க தூதுவரிடம் கையளித்தார்.

விரைவில் திட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்வேன் என்று அமைச்சரிடமும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமைச்சு அதிகாரிகளிடமும் அமெரிக்க தூதுவர் உறுதியளித்ததோடு மிக விரைவில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சரிடம் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment