Pages

Saturday, October 19, 2013

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறல் வட மாகாண கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பிரச்சினை: அமைச்சர் ராஜித சேனாரத்ன ‘இந்து’ பத்திரிகைக்குப் பேட்டி!

Saturday, October 19, 2013
இலங்கை::இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தல், நாட்டின் வடமாகாணத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறதென்று கடற்றொழில் நீர் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இந்தியாவின் ‘இந்து’ ஆங்கில தினசரிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் அத்துமீறி பிரவேசித்து மீன் பிடிக்கும் போது இந்திய கடற்படையினால் கைது செய்யப்படும் போது அவர்கள் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்பார்கள். அதற்கு நான் நீங்கள் சட்ட விரோதமாக இந்தியா கடல் எல்லையில் மீன் பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிaர்கள். எங்களுக்கு எதுவும் செய்ய முடியாது. குற்றமிழைத்த நீங்கள் அதன் பலாபலன்களை அனுபவிக்க வேண்டும் என்று கூறுவோம் என அமைச்சர் டாக்டர் ராஜித சேனராத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் கடற்றொழிலாளர்களை ஓரிடத்தில் சந்திப்பதற்கு வசதி செய்து இப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு உதவுவோம் என்று இந்தியா எங்களுக்கு அளித்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்ற வில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், விரைவில் இந்தியா கடற்றொழிலாளர்களின் கூட்டுச் செயலணியின் கூட்டத்தை நடத்துவது அவசியம் என்று வலியுறுத்தினார்.

ஒரு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன் பிடிக்கும் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு நீண்டகால தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு இரண்டு அரசாங்கங்களும் ஒன்று சேர்ந்து இரு நாட்டு மீனவர்களை சந்திக்க வைப்பது அவசியம் என்று வலியுறுத்தி அமைச்சர், இத்தகைய சந்திப்புக்களை 6 மாதங்களுக்கு ஒரு தடவை நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார்.

2012 இல் இலங்கை இத்தகைய கூட்டு செயற் குழுக் கூட்டத்தை நடத்தியதென்றும் அடுத்த கூட்டத்தை இந்தியா தான் நடத்த வேண்டும் என்று அவர் கூறினார். இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்த 32 இந்திய மீனவர்கள் கைதானது குறித்து இந்து பத்திரிகை நிருபர் கேட்ட கேள்விக்கு மேற்கண்ட பதிலை அமைச்சர் கொடுத்தார்.

இந்தியாவின் வட கிழக்கு கடல் எல்லையில் புல்மோட்டைக்கருகில் சட்ட விரோதமாக மீன்பிடித்துக்கொண்டிருந்த 32 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் நான்கு இழுவைக் கப்பல்களையும் தடுத்து வைத்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த திங்களன்று இராமேஸ்வரத்திலிருந்தும் புதுக்கோட்டையிலிருந்து கடலுக்குச் சென்ற 37 மீனவர்கள் தலைமன்னாருக்கு அப்பால் நெடுந்தீவுக்கு அருகில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
 
இது பற்றி தகவல் தெரிவித்த இலங்கை கடற் படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய கடந்த சில வாரங்கள் இந்திய மீன் பிடி இழுவைக் கப்பல்கள் அதிகமாக இலங்கை கடற் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்து வருகின்றன என கூறினார்.

No comments:

Post a Comment