Pages

Sunday, October 27, 2013

இராணுவ பிரசன்னம் தேவையா? இல்லையா? தீர்மானிப்பது அரசாங்கமே: விலக்குமாறு எவராலும் கோர முடியாது பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய!

Sunday, October 27, 2013
இலங்கை::பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை கொழும்பிலிருந்து வெளியாகும் தேசிய தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துரையாடினார். அங்கு பிரதம ஆசிரியர்களால் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் அவர்களினால் அளிக்கப்பட்ட பதில்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

வடக்கில் தனியாரது காணிகள் பலவும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு அவர்களது தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தங்களது பதில் என்ன?
வடக்கில் சில காணிகள் இராணுவத்தினரின் தேவைகளுக்காக அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதானது ஒரு புதிய விடயமல்ல. கடந்த முப்பது வருடங்களாகப் படையினரின் தேவைகளுக்காக இவ்வாறு சில காணிகள் பெற்றுக் கொள்ளப்பட்டது உண்மைதான். ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் அரசாங்கம் அதற்குரிய வாடகையைச் செலுத்தியே வருகின்றது. எந்தவொரு காணியையும் வாடகை கொடுக்காது பயன்படுத்தி வருவதாக எவருமே கூற முடியாது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதனை இன்று தமது பிரசாரத்திற்காக புதிய விடயமாகக் காட்டி படையினர் மீதும் அரசாங்கத்தின் மீதும் பழி சுமத்துகின்றனர். இதில் உண்மை இல்லை. சம்பந்தன் அவர்கள் உண்மை அறிந்து பேச வேண்டும். இப்போது யுத்தம் முடிவடைந்தமையால் நாம் பல தனியாரது காணிகளை முழுமையாக விடுவித்துள்ளோம். இப்போது படிப்படியாக அது நடைபெற்று வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைப்பது போன்று ஒரே இரவில் எல்லாவற்றையும் விடுவித்துவிட முடியாது. இவ்விடயம் மக்களுக்கு நன்கு புரிகிறது. அரசியல் செய்வதால் தமிழ்க் கூட்டமைப்பினருக்குப் புரிந்தும் புரியாதது போன்று நடித்து வருகின்றனர்.
 
தெல்லிப்பளை, காங்கேசன்துறை, கீரிமலை, மயிலிட்டி உட்படப் பல பிரதேசங்களிலுள்ள தனியார் காணிகள் மக்களிடம் மீளவும் கையளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றுக்கு நட்டஈடுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவை சம்பந்தப்பட்ட மக்களுக்குத் தெரியும்.

வடக்கிலிருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தங்களது கருத்து என்ன?
 
இராணுவத்தினரை வெளியேற்றுமாறு அல்லது விலக்கிக் கொள்ளுமாறு யாருமே கோர முடியாது. அது நாட்டின் பாதுகாப்புச் சம்பந்தமான விடயம். இராணுவத்திற்கு எது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியோ அங்குதான் இராணுவம் நிலை கொண்டிருக்க வேண்டும். அதனைத் தீர்மானிப்பது அரசாங்கமே தவிர வேறெவருமாக இருக்க முடியாது. அது யாழ்ப்பாணமாக இருக்கலாம், அம்பாந்தோட்டையாக அல்லது கொழும்பாகவும் இருக்கலாம். இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. வட மாகாண சபையில் தமிழ்க் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்பதற்காக வாக்களிக்கவில்லை.
 
வடக்கில் இப்போது நாளாந்த கடமைகளிலிருந்து இராணுவம் விலக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இராணுவத்தை ஒருபோதும் விலக்கிக் கொள்ள முடியாது. வடக்கில் மட்டுமல்ல தெற்கில், கிழக்கில், மேற்கில் என நாட்டின் சகல பாகங்களிலும் இராணுவத்தினர் உள்ளனர். தமிழ்க் கூட்டமைப்பு கூறுகிறதென்று வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ள முடியாது. அது நடக்காத காரியம். அதுவே உண்மை.

வடக்கில் இப்போது கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் வடமராட்சியில் ஒரே இரவில் பத்துக் கடைகளில் பல பொருட்கள் கொள் ளையிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் என்ன? இவற்றைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
 
இதுவரை காலமும் படையினர் வீதிகளில் ரோந்து சென்றனர், பல வீதித் தடைகளை நிறுவி மக்களுக்குப் பாதுகாப்பளித்து வந்தனர். இதன் காரணமாக திருடர்கள், பாதாளக் கோஷ்டிகளைச் சேர்ந்த ரெளடிகள் வெளியே நடமாடப் பயப்பட்டனர். மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். இப்போது வீதித் தடைகள் பலவும் நீக்கப்பட்டு படையினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு வருவதால் ரெளடிகளும், திருடர்களும் சுதந்திரமாகத் திரிந்து மக்களைத் துன்புறுத்த ஆரம்பித்துள்ளனர்.
 
உண்மையில் இராணுவம் தமக்குப் பாதுகாப்பாக தம்மத்தியில் இருப்பதையே வடபகுதி மக்களில் எண்பது சதவீதமானோர் விரும்புகின்றனர். ஆனால் தமிழ்க் கூட்டமைப்பு இதற்கு எதிர்மாறாக இராணுவத்தை வெளியேறுமாறு கோரி வருகிறது. அதனால் இனிவரும் காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த வடமாகாண சபைதான் அதன் முதலமைச்சர் ஊடாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
 
வடக்கில் இன்னும் சிறிது காலத்திற்கு இராணுவத்தின் பிரசன்னம் மிக மிக அவசியம். பொலிஸாரினால் மட்டும் அங்கு குற்றச் செயல்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது என்பது சற்றுச் சிரமமான காரியமாகவே இருக்கும். இந்த யதார்த்த நிலையை தமிழ்க் கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும்.
 
வடக்கில் இன்னும் சிறிது காலத்திற்கு இராணுவ பிரசன்னம் அவசியம் தேவை என நான் குறிப்பிடக் காரணம், அந்தப் பிரதேசம் கடந்த முப்பது வருடத்திற்கும் மேலாக பயங்கரவாதிகளின் பிடியில் சிக்குண்டிருந்தமையால் சட்டம், ஒழுங்கு என்பன சீர்குலைந்த நிலையில் காணப்பட்டது. அதனைச் சீர் செய்யச் சிறிது காலம் பிடிக்கும். மக்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்பி பொலிஸார் முழுமையாக தமது பொறுப்புக்களைக் கையேற்கும் வரை சிறு சிறு இடையூறுகள் ஏற்படவே செய்யும்.

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் அம்மாகாண முதலமைச்சருக்கு அங்கு சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட பொலிஸாருக்கு உத்தரவிடும் அதிகாரம் உள்ளதா?
நிச்சயமாக இல்லை. படையினருக்கோ பொலிஸாருக்கோ உத்தரவிடும் அதிகாரம் ஜனாதிபதி அவர்களுக்கு மட்டுமே உள்ளது. ஓர் அமைச்சருக்குக் கூடப் பொலிஸாருக்கு நேரடியாக உத்தரவிடும் அதிகாரம் கிடையாது. இந்நிலையில் ஒரு மாகாண முதலமைச்சருக்கு பொலிஸாருக்கு உத்தரவிடும் அதிகாரம் அறவே கிடையாது. இது வடக்கு மாகாண முதலமைச்சருக்கு மட்டுமல்ல, நாட்டின் எந்தவொரு மாகாண முதல மைச்சருக்கும் பொருந்தும்.
 
அவ்வாறாயின் வடக்கில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலை நாட்டுவது அம்மாகாண முதலமைச்சரின் பொறுப்பு என எப்படிக் கூற முடியும்?
பொலிஸாருக்கு உத்தரவிடும் அதிகாரத்தின் மூலம்தான் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட முடியும் என அர்த்தம் கொள்வது தவறு. இதனைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது பொலிஸாருடன் முதலமைச்சர் இணைந்து பணியாற்ற வேண்டும். பொலிஸாருக்கு முதலமைச்சர் சரியான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். ஓர் இடத்தில் ஒரு சம்பவம் நடந்தால் அது குறித்து பொலிஸாரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்க முதலமைச்சருக்கு சகல உரிமையும் உள்ளது.
 
ஆனால் இவ்வாறு நடந்து கொள்ளுங்கள் எனக் கட்டளை இட்டுப் பணிப்புரை விடுக்க முடியாது. குறிப்பிட்ட பொலிஸார் சரியாக நடந்து கொள்ளாவிடின் அடுத்த மேலதிகாரியிடம் அல்லது மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முறையிடலாம். அதுவும் சரிவராவிடின் பொலிஸ் மா அதிபரிடம் முறையிடலாம். பாரதூரமான விடயங்களாயின் ஜனாதிபதியிடம் முறையிடலாம். இதுவே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும்? ஏனெனில் குற்றம் புரிவோரின் எண்ணிக்கை நளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதனால் சில உத்தரவிடும் அதிகாரங்கள் அரசியல்வாதிகளிடம் இருப்பது நல்லதுதானே?
ஒருபோதும் இல்லை. அதிகாரம் அதிகாரிகளிடம் மட்டுமே இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு தமது பதவி காலத்தில் மக்களுக்குச் சேவை செய்பவர்கள். அதிகாரிகள் அப்படியல்ல. அவர்கள் ஆட்சி மாறினாலும் மக்களுக்குச் சேவைகளைத் தொடர்ந்தும் செய்பவர்கள். பக்கச் சார்பின்றிச் செயற்படுபவர்கள்.
 
அரசியல்வாதிகள் தமது பகுதிகளில் விழிப்புக் குழுக்கள், பிரஜைகள் குழுக்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்கள் எனப் பொதுமக்களைக் கொண்ட அமைப்புக்களை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்தி தமது பகுதிகளில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தலாம். இன்று வடக்கில் இதனையே முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாகக் குற்றச் செயல்களை நிச்சயம் கட்டுப்படுத்தலாம். இதனை விடுத்துப் பொலிஸாரையும், அரசாங்கத்தையும் குறை கூறிக் கொண்டிருப்பதால் காணப் போவது எதுவுமில்லை.

வடக்கில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து வடபகுதியின் மீன் வளத்தைச் சூறையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
 
உண்மைதான். இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி வந்து மீன் பிடிக்கின்றனர். எமது கடற்படை வீரர்கள் அவர்களைத் தடுத்து வருகின்றனர். கடந்த முப்பது வருட கால யுத்தம் காரணமாக எமது மீனவர்கள் கடலுக்குச் செல்வதில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர். அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி அவ்வேளைகளில் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பிற்குள் சுதந்திரமாக வந்து மீன்களைப் பிடித்துச் சென்றனர்.
 
இன்று யுத்தம் முடிவிற்கு வந்தமையால் கட்டுப்பாடு எதுவுமின்றி எமது மீனவர்கள் எமது கடற்பரப்பிற்குள் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிப்பதை இந்திய மீனவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதுவே உண்மை. எனவே பாரிய கடற்படை வீரர்களையும், கரையோரப் பாதுகாப்புப் பிரிவையும் கொண்டுள்ள இந்தியா தனது நாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்பிற்குள் வருவதைத் தடுக்க முயற்சிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை.
 
எமது கடற்படை வீரர்கள் அம்மீனவர்களைத் தடுத்து நிறுத்தினால் அடித்துத் துன்புறுத்தி படகுகளையும் சேதப்படுத்திவிட்டதாக முறையிடுகிறார்கள். உண்மையில் இதனால் எமது வடபகுதி மீனவர்களே அதிகம் பாதிக்கப்படுவதுடன் தமிழக முதலாளிமார் சிலர் கொள்ளை இலாபமீட்டுகிறார்கள். இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாயே திறப்பதில்லை. முதலில் அர்த்தமற்ற வீணான பேச்சுக்களை தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், சக உறுப்பினர்களும் நிறுத்த வேண்டும். இந்தியா சென்று தேவையற்ற விடயங்களைக் கதைத்து காலத்தைக் கடத்துவதை விடுத்து இது போன்ற சொந்த மக்களது அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தமிழ்க் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

மாவீரர் துயிலும் இல்லம் எனப் புலிகளால் அழைக்கப்பட்ட புலிகளின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களை மீளவும் கட்டியெழுப்பக் கோரும் பிரேரணை ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எவ்வகையில் நடைமுறைக்குச் சாத்தியமாகும்?
 
இது மக்களின் கோரிக்கை அல்லவே. இது குறுகிய அர சியல் நடத்தும் சில உள்ளூர் அரசியல்வாதிகளின் விளையாட்டு. இதனைப் பெரிதுபடுத்தி இதற்கு நாம் செவி சாய்த்து வீணாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இன்று வடக் கில் தமிழ்க் கூட்டமைப்பின் ஆட்சியிலேயே மாகாண சபை உள்ளது, பல உள்ளூராட்சி சபைகள் உள்ளன, அதனை விடவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அக்கட்சியில் உள்ளனர்.
 
இந்நிலையில் இவர்கள் ஒன்று சேர்ந்து மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து துயில் இல்லங்களைப் புனரமைக்கப் போவதாகக் கூறுவது வேடிக்கையான விடயம். அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் ஒரு மூத்த அரசியல்வாதி, அனுபவம் உள்ளவர். அவர் இத்தகைய செயற்பாடுகளுக்கு இடமளித்துவருவது ஏன் என்று புரியவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுபல சேனா, இராவண சக்தி போன்ற அமைப்புக்கள் சிறுபான்மையின மக்களது மத உணர்வுகளைக் காயப்
படுத்துவதாக, நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தங்களது பதில் என்ன?
 
சம்பவங்கள் சில இடம்பெற்றுள்ளமை என்பது உண்மைதான். ஆனால் அவை எதுவுமே பாரதூரமானவை அல்ல. உலக நாடுகள் பலவற்றிலும் இதுபோன்ற சிறு சிறு சம்பவங்கள் இடம்பெறத்தான் செய்கிறது. இந்தியா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலே கூட இதுபோன்ற மத ரீதியான சில முரண்பாடுகள் எழத்தான் செய்கிறது. எதிர்காலத்தில் நாம் எமது நாட்டில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாமலிருக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும். அது எமது கடமையும் கூட.
 
மத ரீதியான முறுகல் நிலை ஏற்பட்டால் அதனைப் பொலிஸாரையோ அல்லது படையினரையோ வைத்து அடக்கிவிட முடியாது. உடனடியாக சம்பந்தப்பட்ட மதங்களைச் சேர்ந்த பெரியார்களை முன்னிலைப்படுத்தி சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வினைக் காண முயல வேண்டும். உதாரணத்திற்கு கிராண்ட்பாஸ் சம்பவத்தை எடுத்துக் கொண்டால் அங்கு 1980களின் பின்னர் 1990 ஆம் ஆண்டுகளில் கூட முரண்பாடுகள் காணப்பட்டன. அது புதிய விடயமல்ல. தற்போது அண்மையில் எழுந்த முரண்பாட்டிற்கு சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய விடயங்களிலும் மதத் தலைவர்கள் ஊடாக சுமுகமான தீர்வுகளைக் காண்பதே சிறந்தது.
 
தே. செந்தில்வேலவர்

No comments:

Post a Comment