இலங்கை::நாம் ஒன்றை நினைக்க தெய்வம் இன்னொன்றை நினைக்கிறது” என்பார்கள். இதைப்போல தமிழ் மக்கள் ஒன்றை நினைக்க தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்கள் இன்னொன்றை நினைக்கிறார்கள் போலுள்ளது.
கூட்டமைப்பின் தலைமை ஒன்றை நினைக்க அதனுள்ளிருக்கும் பிறதலைவர்கள் இன்னொன்றை நினைக்கிறார்கள். சம்பந்தனும் விக்கினேஸ்வரனும் செல்வம் அடைக்கலநாதனும் சித்தார்த்தனும் எதிர்க்கிறார்கள். அல்லது புறக்கணிக்கிறார்கள்.
தமிழரசுக் கட்சி ஒன்றை நினைக்க அதன் தோழமைக்கட்சிகள் இன்னொன்றை நினைக்கின்றன. அதாவது, தமிழரசுக் கட்சி பதவியேற்கும் போது பிற கட்சிகளாக ஈ. பி. ஆர். எல். எவ். (சுரேஸ் அணி), ரெலோ, புளொட் போன்றவை அதைவிட்டு விலகியிருக்கின்றன.
மக்கள் ஒன்றை நினைக்க வேறு சிலர் இன்னொன்றை நினைக்கிறார்கள். அதிகாரமில்லாத மாகாணசபை, வடக்கும் கிழக்கும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட மாகாணசபை என்றாலும் பரவாயில்லை. இதை ஒரு ஆரம்பமாகக் கொண்டு புதிய அரசியற் பயணத்தை ஆரம்பிப்போம். என்று கருதியே மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர்.
ஆனால், தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்ற மறுநாளே ஒரு பத்திரிகை தலைப்புச் செய்தியை வெளியிட்டது. “மலர்ந்தது தமிழர் அரசு” என்று போதாக்குறைக்கு 11.10.2013 அன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த மாகாணசபை உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவத்தின் போது, முதல்வர் விக்கினேஸ்வரனுக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிரீடம் அணியப்பட்டது.
போரினாலும் அரசியற் பிரச்சினைகளாலும் மிக நீணடகாலமாகப் பல இழப்புக்களையும் பாதிப்புக்களையும் பின்னடைவுகளையும் சந்தித்த மக்கள் அமையவுள்ள மாகாண சபையின் மூலமாக ஒரு மாற்றமும் தீர்வும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால், தேர்தலுக்குப் பிறகு, தினமும் நடக்கின்ற அரசியற் கூத்துகளையும் பத்திரிகைச் செய்திகளையும் பார்த்து, ‘என்னதான் நடந்து கொண்டிக்கிறது? இதெல்லாம் எங்கே போய் முடியப்போ கிறது?” என்று அச்சமடைகின்றனர் மக்கள்.
இருக்காதா பின்னே, இப்படி ஆளாளுக்கும் கட்சிக்குக் கட்சியும் அடிபட்டுக்கொண்டால் மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமல்ல கோபமும் வந்தே தீரும்.
மக்களுடைய கோபம் என்ன செய்யும்? அவர்கள் அதையெல்லாம் கொஞ்சக் காலத்தில் மறந்து விடுவார்கள்” என்று இந்தத் தலைவர்கள் கருதக்கூடும். என்றபடியால்தானே மக்களின் விருப்பங்களுக்கு மாறாக இப்படியான காரியங்கள் (கூத்துகள்) நடக்கின்றன!
ஆட்சியமைத்துள்ள மாகாணசபையின் முன்னே ஏராளம் பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன. மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருக்கின்ற அளவுக்கு பொறுப்புகளின் கனதியும் கடமைகளின் அவசியமும் உண்டு.
அப்படியிருக்கும்போது ஏட்டிக்குப் போட்டியாக ஒரே அமைப்புக்குள்ளே குத்து வெட்டுகளும் குழிபறிப்புகளும் என்றால்...?
மக்கள் ஒற்றுமையாக, ஒன்று பட்டிருக்க வேண்டும் என்று கூறியவர்களும் கோரிக்கை வைத்தவர்களும் இப்படி குத்து வெட்டுப்பட்டுச் சந்தி சிரிக்க நடந்தால்...?
இந்த லட்சணத்தில், எப்படி மலைபோலிருக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும்? மக்கள் மனங்களிலிருக்கும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இயலும்?
முதல்வர் விக்கினேஸ்வரனின் அணி ஏறக்குறை நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களைப் பற்றிச் சிந்திப்பதாகத் தெரிகிறது. அதனால் யதார்த்தமான விசயங்களை நோக்கி அவர் காரியங்களைச் செய்து வருகிறார். பதவியேற்புக்குப் பிறகு முதல்வர் தெரிவித்து வரும் கருத்துகளும் இதையே சொல்கின்றன.
ஆனால், நடைமுறைக்குப் புறம்பான முறையில் சிந்திக்கும் தரப்பினர் முதல்வரின் சிந்தனைக்கு மாறாகவே நடக்க முற்படுக்கின்றனர் போலுள்ளது. உள்ளுக்குள்ளே ஆயிரம் பிரச்சினைகளும் மோதல்களும் நடக்கலாம். அதை ஜனநாயக முறையில் தீர்த்து, ஒரு பலமான ஆட்சியை உருவாக்குங்கள் என்றே மக்கள் சொல்கிறார்கள்.
ஆளாளுக்குள் காய்ந்து கொண்டிருக்கும் உட்காய்ச்சலோடு ஆட்சியைத் தொடர்ந்தால் அதனால், மக்களுக்கு நன்மைகளே கிட்டாது.
பதிலாக எதிர்விளைவுகளே உருவாகும். பாருங்கள், சிங்களச் சமூகத்தின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக மென்போக்கைக் கடைப்பிடித்து வரும் முதல்வர் விக்கினேஸ்வரன், ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணத்தைச் செய்தார். இதன்மூலம், எதிர்காலத்தில் முரண்பாடற்ற நிலையில் மாகாணசபையை முன்னகர்த்திச் செல்வதற்கும் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கும் தான் தயாராக இருக்கிறேன் என்பதை அவர் குறியீடாகத் தெரிவித்தார். ஆனால், ஏனையவர்கள் இதை நிராகரித்தனர். அவர்கள் வழமையைப்போல எதிர் நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் தாம் இருப்போம் என்பதை வெளிப்படுத்தினர்.
இது விக்கினேஸ்வரனின் நல்லெண்ண முயற்சியைத் தோற்கடிக்கும் ஒரு நடவடிக்கையே. அதாவது சிங்களச் சமூகத்தையும் தமிழ்ச் சமூகத்தையும் எதிரெதிர்நிலையில் வைத்திருக்கும் காரியமே.
இதற்குள், முதல்வர் விக்கினேஸ்வரனுக்கும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் சூட்டப்பட்ட கிரீடம் என்பது தென்னிலங்கையிலும் பிற சமூகங்களின் மத்தியிலும் சந்தேக உணர்வையே ஏற்படுத்தியுள்ளது. அதிகாரம் குறைந்த மாகாணசபையைப் பொறுப்பேற்கும்போதே இத்தகைய ஆட்சிக் குறியீட்டைக் காட்டும் தமிழர்கள் (விக்கினேஸ்வரன் கையில் வேல் வைத்திருப்பதைக் காண்க) முழுமையான அதிகாரமுள்ள ஒரு சுயாட்சி அமையும்போது எப்படி நடந்து கொள்வார்கள் என்று அவர்கள் ஐயமுறுவர்.
ஆனால், இந்தக் கிரீடம் அணிந்த விசயத்தை தமிழ் மக்களில் பலரும் கூட விரும்பவில்லை. இதை அவர்கள் ஒரு கோமாளித்தனமான விசயமாகவே பார்க்கின்றனர்.
விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் முன்னெடுத்து வரும் அரசியற் பாதையை இந்த மாதிரியான கூத்துகள் கெடுத்துவிடக்கூடியன. ஆகவே உள்ளிருந்தே விக்கினேஸ்வரனுக்குத் தலையிடிகளும் குழிபறிப்புகளும் எதிர்ப்புகளும் நடக்கின்றன. சிலர் அணைத்துக் கெடுக்கிறார்கள். சிலர் விரட்டிக் கெடுக்கிறார்கள்.
இதை முகப்புத்தக நண்பர் ஒருவர் அண்மையில் மிக அழகாக எழுதியிருந்தார். விக்கினேஸ்வரன் எதிரிகளையிட்டு அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், அவர் தன்னுடைய நண்பர்க ளையிட்டே அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என. ஆனால், கெடுகுடி சொற்கேளாது என்பதைப்போலவே எதிர்காலத்தில் வடமாகாணசபையின் நிலை மாறப்போகிறது. மக்கள் ஒன்றை எதிர்பார்க்க மாகாணசபை உறுப்பினர்கள் ஒன்றைச் செய்கிறார்கள் என்ற கதை தொடரத்தான் போகிறது போலும்.
வடபுலத்தான்

No comments:
Post a Comment