மதுரை::இலங்கைக்கு போர்க்கப்பல்களை விற்கும் முடிவிற்கு தடை கோரிய வழக்கில், மத்திய அரசின் நிலை குறித்து தெரிவிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல மனு: மத்திய அரசு, இரு போர்க் கப்பல்களை இலங்கைக்கு விற்க திட்டமிட்டுள்ளது; இதை, மத்திய அமைச்சர் நாராயணசாமி உறுதிப்படுத்தியுள்ளார். "இலங்கையை நட்பு நாடு என கூறக் கூடாது' என, தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை கடற்படை, 97 இந்திய மீனவர்களை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களை, கொலை செய்துள்ளது. போர்க் கப்பல்களை விற்பனை செய்தால், இலங்கையின் செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பதாக அமையும். இம்முடிவை கைவிட வலியுறுத்தி, மத்திய கேபினட் செயலர், தமிழக தலைமைச் செயலருக்கு மனு அளித்தேன். இலங்கைக்கு போர்க் கப்பல்களை விற்பனை செய்ய, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள், எம்.ஜெய்சந்திரன், எம்.வேணுகோபால், "பெஞ்ச்' முன், மனு விசாரணைக்கு வந்தது.
இலங்கைக்கு போர்க்கப்பல் விற்கும் மத்திய அரசின் முடிவிற்கு, தமிழக முதல்வர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுவரை பதில் இல்லை' என, கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் தெரிவித்தார். "தமிழக முதல்வரின் கடிதத்திற்கு, மத்திய அரசு எத்தகைய பதில் அனுப்பியுள்ளது என, அக்.,29 ல் தெரிவிக்க வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment