Pages

Thursday, October 17, 2013

பட்ஜெட்டுக்கு எதிர்கட்சிகள் ஒப்புதல் அமெரிக்க நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி அலுவலகங்கள் இன்று திறப்பு!

Thursday, October 17, 2013
வாஷிங்டன்::அதிபர் ஒபாமாவின் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு நிதி அளிக்கும் பட்ஜெட்டுக்கு, முக்கிய எதிர்கட்சியான குடியரசு கட்சி ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து கடந்த 16 நாட்களாக அமெரிக்காவில் நிலவி வந்த நிதி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மைய அரசு அலுவலங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளன.அமெரிக்க அதிபர் ஒபாமா கொண்டு வந்த, ஒபாமா கேர் என்ற பெயரிலான மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு எதிர்கட்சியான குடியரசு கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒபாமா கட்சியை சேர்ந்த எம்பிக்கள் சிலரும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
திட்டத்தை கைவிடாவிட்டால் பட்ஜெட்டை நிறைவேற்ற ஒத்துழைக்க மாட்டோம் என குடியரசு கட்சி திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. எதிர்கட்சிகளின் மிரட்டலுக்கு பயந்து மருத்துவ காப்பீடு திட்டத்தை கைவிட மாட்டேன் என ஒபாமா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பட்ஜெட் நிறைவேற்றப்படவில்லை. மைய அரசின் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டன. பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்பட ஒரு சில முக்கிய அலுவலகங்கள் மட்டும் செயல்பட்டன. முக்கியமான ஊழியர்கள் மட்டும் பணிக்கு வரவேண்டும் என மைய அரசு உத்தரவிட்டது. மற்ற ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நிதி நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து குடியரசு கட்சி மற்றும் ஆளும் ஜனநாயக கட்சி எம்பிக்களுக்கிடையே நேற்று பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளை மறந்து சமரச தீர்வு எட்டப்பட்டது.
 
இந்த விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக செனட் அவையின் தலைவர் ஹாரி ரீட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து அமெரிக்க காங்கிரஸ் மற்றும் செனட் சபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 100 உறுப்பினர் களை கொண்ட செனட் சபையில் 81 பேர் பட்ஜெட்டுக்கு ஆதரவு அளித்தனர். 16 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். இதே போல் காங்கிரசில் 285 பேர் ஆதரவாகவும் 144 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். இதை தொடர்ந்து கடந்த 16 நாட்களாக நிலவி வந்த அமெரிக்க நிதி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள் ளது. மைய அரசின் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கின.

No comments:

Post a Comment