Pages

Friday, October 18, 2013

எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை!

Friday, October 18, 2013
சென்னை::அ.தி.மு.க.வின் 42_வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா அங்கு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கூடவே 42_வது ஆண்டு விழா மலரையும் அவர் வெளியிட்டார்.
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 42_ஆவது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு நேற்று காலை11 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள தலைமைக் கழகத்திற்கு வருகை தந்தார். பின்னர் கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, '42_ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா சிறப்பு மலரை' வெளியிட்டார். அதன் முதல் பிரதியை நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான திரு. பி.தங்கமணி பெற்றுக் கொண்டார்.  
 
அதனைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அங்கே குழுமியிருந்த கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இனிப்புக்களை வழங்கினார்.
 
தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நம் அரசியல் எதிரிகளாலும், சமூக விரோதிகளாலும் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்த கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கும், கழகப் பணியாற்றும் போது விபத்துக்குள்ளாகி அகால மரணமடைந்த கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கும், நலிவடைந்த கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கும், ஆக மொத்தம் 37 பேர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 37 லட்சம் ரூபாயை குடும்ப நல நிதியுதவியாக முதல்வர் ஜெயலலிதா வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 
 
நிறைவாக, கழகப் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணியின் சார்பில், நலிவடைந்த 7 பேர்களுக்கு இலவச ஆட்டோக்களை வழங்கினார்கள்.  இந்நிகழ்வின் போது, கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், 
தென் சென்னை வடக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணித் தலைவர் 
 
எஸ். ஜானகிராமன் (எ) எஸ்.எஸ்.எஸ்.ராமு ஆகியோர் உடன் இருந்தனர்.
தங்கள் குடும்ப சூழ்நிலையை அறிந்து நிதியுதவி மற்றும் இலவச ஆட்டோக்களை வழங்கிய கழகப் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் தங்களுடைய உணர்வுப் பூர்வமான நன்றியினை நெஞ்சம் நெகிழ தெரிவித்துக் கொண்டனர். 
 
இந்த நிகழ்ச்சியில், கழக அவைத்தலைவர் மதுசூதனன், கொள்கை பரப்புச்செயலாளர் தம்பிதுரை உட்பட தலைமைக் அ.தி.மு.க. நிர்வாகிகளும், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன் உட்பட  கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
 
கழகப் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாக போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து தலைமைக் கழகம் வரை, கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் சார்பில் சாலையின் 
இரு மருங்கிலும் கழகக் கொடித் தோரணங்களும், வரவேற்புப் பதாகைகளும் அழகுற அமைக்கப்பட்டு, கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் ஆங்காங்கே பெருந்திரளான அளவில் திரண்டிருந்ததோடு, கழக உடன்பிறப்புகள் கழகக் கொடிகளையும், அண்ணா தொழிற்சங்க உடன்பிறப்புகள் தொழிற்சங்கக் கொடிகளையும் தங்கள் கைகளில் ஏந்திய வண்ணம் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

No comments:

Post a Comment