Wednesday, October 16, 2013

ஞானதேசிகன் தலைமையில் சிதம்பரம், வாசன் உட்பட 25 பேர் கொண்ட லோக்சபா தேர்தல் பணிக்குழு நியமனம்!

Wednesday, October, 16, 2013
சென்னை::தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன் உட்பட, 25 பேர் கொண்ட லோக்சபா தேர்தல் பணிக்குழுவை, கட்சி தலைவர் சோனியா ஒப்புதலுடன், பொதுச்செயலர் ஜனார்த்தன் திவேதி நேற்று அறிவித்தார்.

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், மாநில வாரியாக காங்கிரஸ் மேலிடம், தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவை நியமித்து வருகிறது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தலைவராகவும், மாநில தலைவர் ஞானதேசிகன் அமைப்பாளராகவும், குழு உறுப்பினர்களாக சட்டசபை காங்கிரஸ் தலைவர் கோபிநாத், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், பட்டுக்கோட்டை ரங்கராஜன் எம்.எல்.ஏ., மேலிட பொறுப்பாளர்கள் சின்னாரெட்டி, சத்தீசன் ஆகியோர் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒருங்கிணைப்புக்குழுவை தொடர்ந்து, தமிழக காங்கிரசுக்கு, 25 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை கட்சி தலைவர் சோனியா ஒப்புதலுடன், பொதுச்செயலர் ஜனார்த்தன் திவேதி நேற்று அறிவித்தார். தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றவர்கள் விவரம்:
 
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரபு, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், மணிசங்கர் அய்யர், தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலர்கள் திருநாவுக்கரசர், ஜெயக்குமார், செல்லக்குமார், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கோபிநாத், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா, பாராமலை, ஜே.எம்.ஆரூண் எம்.பி., மகளிர் காங்கிரஸ் தலைவி சாய்லட்சுமி, சேவாதள தலைவர் கோவை செல்வராஜ், மாணவர் காங்கிரஸ் தலைவர் சுனில் ராஜா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதால், தற்போது, துணை தலைவர் விஜய் இளஞ்செழியன் பணியாற்றி வருகிறார். பட்டியலில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர பெயர் குறிப்பிடவில்லை. இதனால் இளைஞர் காங்கிரஸ் சார்பில் யார் உறுப்பினர் என்ற குழப்பம் அக்கட்சியில் நீடித்து வருகிறது.

No comments:

Post a Comment