Pages

Saturday, May 4, 2013

வெயில் நேரத்தில், நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முரண்டு!

Saturday, May 04, 2013
திருச்சி:::விழுப்புரத்தில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, கடந்த, 1ம் தேதி அதிகாலை, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறையில் உள்ள ராமதாஸ் மற்றும் மணி ஆகியோர் மீது, மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மாமல்லபுரத்தில், 2012ம் ஆண்டும், கடந்த வாரமும் நடந்த சித்திரை திருநாள் கூட்டங்களில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் பேசியது; அனுமதியின்றி கூட்டம் நடத்தியது என, இரண்டு புதிய வழக்குகளில், கைது செய்யப்பட்டனர்.
வெயில் நேரத்தில், நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முரண்டு பிடித்தது, போலீசாரை, தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.
இதற்கான உத்தரவை, நேற்று முன்தினம் இரவு, மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் சாரதி, சிறைத் துறை அதிகாரிகளிடம் வழங்கினார். அந்த உத்தரவுப்படி, சிறையில் உள்ள ராமதாஸ் மற்றும் மணியை, திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, நேற்று காலை, அழைத்துச் செல்ல, போலீசார் தயாராகினர்.ஆனால், ராமதாஸ், ""தன்னால் வெயிலில், நீதிமன்றத்துக்கு வர முடியாது. அப்படி வருவதென்றால், சொந்தக் காரில் தான் வருவேன்,'' எனக் கூறினார். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.இந்த நிலையில், ராமதாசை, நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல, உடன் இருந்த, பா.ம.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து, சிறையில் உள்ள மரங்களில் ஏறி, ஆர்ப்பாட்டம் செய்தனர்; பின், உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை, போலீசார் சமாதானப்படுத்தினர்.
திடீர் உடல் நலக்குறைவு:
 
ராமதாசுக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, சிறை டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்திருந்தது தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, உரிய உடல் நலமில்லை எனக் கூறி, டாக்டர்கள் சான்றிதழ் வழங்கினர்.இதையடுத்து, ராமதாசை, திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் திட்டத்தை, போலீசார் கைவிட்டனர். பின்னர், அதே வழக்கில் சிக்கியுள்ள, பா.ம.க., தலைவர், மணி மட்டும், போலீஸ் பாதுகாப்புடன், பகல், 12:30 மணிக்கு, திருச்சி சிறையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
வெயிலில் வர மாட்டேன்:
 
ராமதாசை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, "வெயில் நேரத்தில், நீதிமன்றத்துக்கு வர முடியாது. அதிகாலை நேரத்திலோ அல்லது சூரியன் மறையும் நேரத்திலோ தான், என்னால் வர முடியும்' என்று, ராமதாஸ் கூறியதாக, உளவுப் பிரிவு போலீசார் தெரிவித்தனர். வரும், திங்கள் கிழமை, அவர், திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரஜினி ரசிகர்களை தாக்கிய வழக்கு ராமதாசை கைது செய்தது மதுரை போலீஸ்
மதுரை:ரஜினிகாந்த் ரசிகர்களை தாக்கிய வழக்கில், பா.ம.க., நிறுவனர், ராமதாசை போலீசார், மீண்டும் கைது செய்துள்ளனர்.
 
திரைப்படங்களில், ரஜினிகாந்த், சிகரெட் புகைத்ததற்கு, ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து, சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2004 ம் தேதி, மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், பங்கேற்க ராமதாஸ் வந்தார். அப்போது, நெல்பேட்டை அருகே, ரஜினி ரசிகர்கள், கறுப்புக்கொடி காட்டி, எதிர்ப்பு தெரிவித்தனர். ஆத்திரமடைந்த பா.ம.க.,வினர், ராமதாஸ் முன்னிலையில், ரசிகர்களை தாக்கினர்.
இதுதொடர்பாக, ராமதாஸ் உட்பட, 11 பேர் மீது, விளக்குத்தூண் போலீசார், கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். பின் இது, கொலை மிரட்டல் வழக்காக மாற்றப்பட்டது. கடந்த, 2009 டிசம்பரில், இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.வழக்கு, 2011 ம் ஆண்டு, விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமதாஸ் தவிர மற்றவர்கள், முன்ஜாமின் பெற்றனர். ஜாமின் பெற்றவர்களை, விசாரணைக்கு ஆஜராக, கோர்ட் சம்மன் அனுப்பியது. ராமதாஸ், ஜாமீன் பெறாததால், அவரை கைது செய்ய, கோர்ட், "வாரன்ட்' பிறப்பித்தது.
ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்திருந்த போதிலும், ராமதாசை கைது செய்ய, போலீசார், அப்போது ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், 2004 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில், மதுரை போலீசார், கைது, "வாரன்ட்' பிறப்பித்து, திருச்சி சிறையில், நேற்று கொடுத்துள்ளனர்...
 
50 பஸ்கள் மீது தாக்குதல் ; இரண்டு பஸ்கள் தீக்கிரை!
 
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டவர்கள் கைதை தொடர்ந்து, தமிழகத்தில் நேற்றும் ஆங்காங்கே வன்முறை, மறியல் சம்பவங்கள் நடந்தன. இதில். 50க்கும் மேற்பட்ட பஸ்கள் தாக்கப்பட்டன. இரண்டு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
மாமல்லபுரத்தில், வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பில் நடத்தப்பட்ட, சித்திரை விழாவை ஒட்டி, மரக்காணத்தில் வன்முறை சம்பவம் நடந்தது. மேலும், சித்திரை விழா கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பேசினார். இதைத் தொடர்ந்து, ராமதாஸ், ஜி.@க.மணி, திருக்கச்சூர் ஆறுமுகம், காடுவெட்டி குரு உள்ளிட்ட பா.ம.க., நிர்வாகிகளை, போலீசார் கைது செய்தனர். கைது சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளில், வன்முறை சம்பவங்கள் நடந்தன.
நேற்று முன்தினம் வரை, தமிழகம் முழுவதும், 220 அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 48 இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு, சாலையில் தடை ஏற்படுத்தப்பட்டன. சில இடங்களில், மரங்கள் கொளுத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக, 3,460 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவங்கள் தொடர்ந்து வந்த நிலையில், நேற்று காலை, சென்னையில் இருந்த அன்புமணியும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து.மேலும், சில இடங்களில் வன்முறை அரங்கேறியது.
சென்னையில், வேளச்சேரி, கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பஸ்களின் கண்ணாடி நொறுக்கப்பட்டது. வேலூரில் இரண்டு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. திருப்போரூரில், இரண்டு பஸ்கள் மீது கல் வீச்சு நடந்தது. மேலும், காஞ்சிபுரம் பகுதியில், பல இடங்களில், 15க்கும் மேற்பட்ட பஸ்கள் என மொத்தம், 50 பஸ்கள் தாக்குதலுக்குள்ளாகின. இந்த சம்பவங்கள் தொடர்பாக, வன்முறையில் ஈடுபட்ட, 250க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில், சாலையில் இருந்த பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு சாலையில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இரவு நேர பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன...
 
ராமதாசுக்கு வழங்கிய ஜாமின் ; தடை கோரி ஐகோர்ட்டில் முறையீடு!
 
சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, விழுப்புரம் கோர்ட் வழங்கிய ஜாமினுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், அரசு சார்பில், நேற்று முறையிடப்பட்டது. ஜாமின் ரத்து கோரி, திங்கள் அன்று மனு தாக்கல் செய்ய, ஐகோர்ட் அனுமதித்தது. விழுப்புரத்தில், தடையை மீறி போராட்டம் நடத்த முற்பட்டபோது, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு, விழுப்புரம் கோர்ட், நேற்று ஜாமின் வழங்கியது. ஜாமினுக்கு தடை கோரி, சென்னை ஐகோர்ட்டில், நீதிபதி சத்தியநாராயணன் முன், அட்வகேட் - ஜெனரல் சோமயாஜி ஆஜராகி, ""விழுப்புரம் மாவட்டத்தில், ஒரு பாலத்துக்கு குண்டு வைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டது; அரசு பேருந்துகள் கொளுத்தப்பட்டன; இதை எல்லாம் பரிசீலிக்காமல், விழுப்புரம் கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றார். இதையடுத்து, ஜாமினை ரத்து செய்யக் கோரி, மனு தாக்கல் செய்ய, அரசு தரப்புக்கு அனுமதித்து, விழுப்புரம் கோர்ட்டில் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்யவும், நீதிபதி வாய்மொழி உத்தரவிட்டுள்
ளார்.
 
அன்புமணி ராமதாஸ் கைது - 15 நாள் சிறை!
 
சென்னை::முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகனுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்..பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

மரக்காணம் கலவரம், வன்முறையை தூண்டும் பேச்சு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ., பாமக தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு விழாவில் பேசியது தொடர்பாக, மாமல்லபுரம் போலீசார் பிடிவாரண்ட் அளித்துள்ளனர்.2012-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரைப் பெருவிழா நிகழ்ச்சியில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கட்சித்தலைவர் ஜி.கே.மணி உள்பட 750 பேரும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சென்னை தியாகராயநகர் திலக் தெருவில் உள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் வீட்டுக்கு நேற்று காலையில்  போலீசார் சென்றனர்.

காலை 7.50 மணிக்கு  மதுராந்தகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அவரை கைது செய்தனர். 2012-13 சித்திரை முழுநிலவு பெருவிழாவில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி விதிமுறைகளை மீறி பேசியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அன்புமணி ராமதாஸ் மீது, சட்டவிரோதமாக கூடுதல், கலவரத்தில் ஈடுபடுதல், பொது ஊழியரின் உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளில், மகாபலிபுரம் காவல் நிலையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அன்புமணி ராமதாசை போலீசார் திருக்கழுக்குன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு அன்புமணி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், சென்னையில் இருந்து செல்லும், பெரும்பாலான பேருந்துகள் மூன்றாவது நாளாக நேற்று முன்தினம் இரவில் நிறுத்தப்பட்டன.விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கான பேருந்து சேவை நிறுத்தப்பட்டன. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இருந்த பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். பாமகவினரின் போராட்டம் காரணமாக புதுச்சேரியில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும்  நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸை சிறையிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி புதுச்சேரியில்  முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. பாமக அழைப்பு விடுத்துள்ள இந்த கடையடைப்பை முன்னிட்டு புதுவையில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படாததால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரியின் வடக்கு எஸ்.பி.ராமராஜ், பாதுகாப்பு பணியில் 1000க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், பேருந்துகளை இயக்க முன்வந்தால் காவல்துறையினர் பாதுகாப்பு தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment