Pages

Tuesday, May 14, 2013

சவூதித் தூதுவர் மீண்டும் இலங்கையில்!

Tuesday, May 14, 2013
இலங்கை::திருப்பி அழைக்கப்பட்டிருந்த இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார்.
சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய மூதூரைச்  சேர்ந்த ரிசானா  நபீகிற்கு கடந்த ஜனவரி 9ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அஹமட் ஜவாத் கடந்த ஜனவரி 9ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் மீளழைக்கப்பட்டார்.
இதனையடுத்து இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸை 24 மணித்தியாலத்துக்குள் நாடு திரும்புமாறு சவூதி அரேபிய அரசாங்கம் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி அறிவித்தது.
இந்நிலையில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக வீ.கிருஷ்ணமூர்த்தி அண்மையில் நியமிக்கப்பட்டார். இதனையடுத்தே இலங்கைக்கான சவூதி அரேபியத்  தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புனித ரமழானை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் சுமார் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது  இந்தப்  பேரீச்சம் பழங்கள் உத்தியோகபூர்வமாகக்  கையளிக்கப்பட்டன. இப்பேரீச்சம் பழங்களை இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் , புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரான பிரதமர் டி.எம்.ஜயரத்னவிடம் கையளித்தனர்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட  அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதி அமைச்சர்களான எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன, அப்துல் காதர், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment