Friday, May 03, 2013
ஓசூர்::இலங்கை தமிழர்கள், ஆஸ்திரேலியா செல்வதை தடுக்கும் வகையில்,
கடலோர காவல் படை மற்றும் "கியூ' பிரிவு போலீசார், அகதி முகாம்களில் விசாரணை நடத்தி,
அறிவுரை கூறி வருகின்றனர். தமிழகத்தில், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்போர்,
படகுகளில், ஆஸ்திரேலியா தப்பி செல்வது, அதிகரித்து வருகிறது. மண்டபம், விழுப்புரம்,
விருதுநகர் உள்ளிட்ட முகாம்களில் இருந்து தப்ப முயன்ற, 88 இலங்கை தமிழர்களை,
மங்களூரில், கர்நாடகா போலீசார் மீட்டு, அவரவர் தங்கியிருந்த முகாம்களுக்கு, அனுப்பி
வைத்தனர்.
இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அகதி முகாம்களில், "கியூ' பிரிவு
போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி, அறிவுரை
வழங்கி வருகின்றனர். ஓசூர் கெலவரப்பள்ளி முகாமில், விசாரணை நேற்று நடந்தது.
அப்போது,< "ஆபத்தான பயணம் மேற்கொண்டு, தப்பி செல்ல வேண்டாம். ஏஜென்டுகள்
ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி, பணம் வசூலித்து விட்டு, மோசடி செய்து
விடுவர். அதனால், பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என, அறிவுரை கூறினர். அதற்கு,
இலங்கை தமிழர்கள், "குடியுரிமை இல்லாமல், குழந்தைகள் எதிர்காலம்
கேள்விக்குறியாகிறது. அகதிகளாக, 25 ஆண்டாக வசிக்கிறோம். அதனால், முதலில் குடியுரிமை
வாங்கி கொடுங்கள். குடியுரிமை கிடைக்கா விட்டால், கண்டிப்பாக ஆஸ்திரேலியா செல்வோம்'
என்றனர்.

No comments:
Post a Comment