Monday, May 13, 2013

பாகிஸ்தானில் 14 ஆண்டுகளுக்கு பிறகு 3வது முறை பிரதமராகிறார் நவாஸ் ஷெரீப்!

Monday, May 13, 2013
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நவாஸ் ஷெரீப்(63) மீண்டும் பிரதமராகிறார். கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி 2வது இடத்தை பெற்றுள்ளதால், அவர் எதிர்க்கட்சித் தலைவராகிறார்.  அதிபர் சர்தாரியின் ஆளும்கட்சி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல், பஞ்சாப், கைபர் பக்துன்கவா, சிந்து, பலுசிஸ்தான் ஆகிய மாகாண தேர்தல்கள் நேற்றுமுன்தினம் நடைபெற்றன.

 நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 343 தொகுதிகளில் 272 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம்லீக்(என்) கட்சி, கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்,இ,இன்சாப் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், தேர்தலின் போது நடந்த தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டனர். ஆனாலும், மக் கள் அதிக அளவில் தேர்தலில் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததுமே ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. கடைசியாக நேற்றிரவு நிலவரப்படி 120 தொகுதிகளில் நவாஸ் ஷெரீப் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னிலை நிலவரத்தின்படி அவரது கட்சி 130 இடங்களில் வெற்றி பெறும் என தெரிகிறது. பெரும்பான்மை பெற 137 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். எனவே, சுயேச்சைகளின் ஆதரவுடன் நவாஸ் மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியானது.

இம்ரான்கான் கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்று 2ம் இடம் பிடித்துள்ளது. இதனால், இம்ரான்கான் எதிர்க்கட்சி தலைவராகிறார். அதிபர் சர்தாரியின் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு தேர்தலில் இந்த கட்சி 124 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் பர்வேஸ் அஷ்ரப் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் இத்தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர்.

நவாஸ் ஷெரீப் பஞ்சாப் மாநிலம் சர்கோதா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் 19,125 வாக்குகளை பெற்றுள்ளார். இம்ரான் 4 தொகுதிகளில் போட்டி யிட்டு 3ல் வெற்றி பெற்றுள் ளார். லாகூரில் தோற்றார். நவாஸ் தனது லாகூர் இல்லத்திலிருந்து ஆதரவாளர்களிடையே நேற்று பேசுகையில், ''பாகிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த முயற்சிப்பேன்’ என்றார்.

 மாகாண தேர்தல்களை பொறுத்த வரையில் பஞ் சாப் மாகாணத்தில் மொத் தம் உள்ள 297 தொகுதிகளில் நவாஸ் கட்சி 188 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கைபர்,பக்துன்கவா தொகுதியில் இம்ரான்கான் கட்சி 31 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 14 ஆண்டுக்கு பின் மீண்டும் பதவி: நவாஸ் ஷெரீப் 1990,1993, 1997,1999ம் ஆண்டுகளில் பிரதமராக பதவி வகித்தார். 1999ம் ஆண்டில் அப்போது ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், ஊழல் புகாரின் பேரில் நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியை கவிழ்த்து, அவரை சிறையில் அடைத்தார். பின்னர், அவர் சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

கடந்த 2008ம் ஆண்டில் மீண்டும் நாடு திரும்பிய நவாஸ், கட்சியை பலப்படுத்தினார். இப்போது தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகியுள்ளார். நவாஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நேரத்தில், அவரது ஆட்சியை கவிழ்த்த முஷாரப் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இனி நவாஸ் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment