Pages

Friday, March 8, 2013

சென்னையில் நடத்த தமிழக அரசாங்கம் மறுப்பு தெரிவித்த கிரான்பிரிக்ஸ் போட்டிகள் கொழும்பில்!

Friday, March 08, 2013
இலங்கை::இலங்கைக்கு கிடைத்த கௌரவம்: சென்னையில் நடத்த தமிழக அரசாங்கம் மறுப்பு தெரிவித்த கிரான்பிரிக்ஸ் போட்டிகள் கொழும்பில்!

இந்த வருடத்துக்கான ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளை சென்னையில் நடத்த தமிழக அரசாங்கம் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆசிய கிரான்பிரிக்ஸ் போட்டிகளை கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி இந்த போட்டி மே மாதம் 12ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலவரங்களை காரணம் காட்டி, ஜுன் -ஜுலை மாதங்களில் நடைபெறவிருந்த ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதிக்கப் போவதில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதற்கு முன்னதாக நடைபெறும் கிரான்பிரிக்ஸ் போட்டிகளை கொழும்பில் நடத்துவதாக, ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.....

இலங்கை வீரர்கள் தமிழ் நாட்டுக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இந்நிலையில் தற்போது இந்தப் போட்டி கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளமையினால் இந்திய வீரர்கள் இலங்கைக்கு வருவார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,

நிச்சயமாக நாங்கள் அவர்களை வரவேற்போம். அதில் எந்த தடையும் இல்லை. அவ்வாறு அவர்கள் செய்ததனால் இங்குவரக் கூடாது என்ற எந்த நிபந்தனையும் இல்லை.

நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் வைராக்கியத்துடன் செயற்படுவதில்லை. செயற்படவும் மாட்டோம். சகல விடயமும் சுமுகமான முறையிலும் இராஜதந்திர மட்டத்திலும் மேற்கொண்டே வருகின்றோம்.

ஒருவர் தவறு விடுகின்றார் என்பதற்காக அதே தவறை நாம் செய்ய கூடாது. தவறை சரியானவற்றின் மூலம் இல்லாமல் ஆக்கவேண்டும். எது எவ்வாறாயினும் சென்னையில் நடைபெறவிருந்த ஆசிய தடகள போட்டிகள் கொழும்புக்கு மாற்றியமை இலங்கைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். இதற்கு பலரது ஒத்துழைப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

No comments:

Post a Comment