Tuesday, March 05, 2013
இலங்கை::ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பான நடவடிக்கைகளுக்காக தமது அதிகாரிகள் குழுவொன்றை அங்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்ட மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதற்கமைய, எதிர்வரும் 9ஆம் திகதி அதிகாரிகள் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் குழுவில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத், பிரதி சொலிசிட்டர் ஜெனரல்களான ஷவீந்திர பெர்னாண்டோ மற்றும் டீனிஸ் நவாஸ் ஆகியோர் அடங்குகின்றனர்.
ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்கவிற்கு இவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என சட்ட மா அதிபர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பான கண்காணிப்பு அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தற்போது ஜெனீவா சென்றுள்ள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புவனகே அளுவிஹாரே, சிரேஷ்ட சட்டத்தரணி நெரீன் புள்ளே மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக் டி சில்வா ஆகியோரினால் இந்த அறிக்கையை தயாரிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுவதாக சட்ட மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

No comments:
Post a Comment