Monday, March 04, 2013
இலங்கை::இலங்கைக்கு அபகீர்த்தி எற்படுத்தவும், ஓர் ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வருவதற்காகவே ஜெனீவாவில் மனித உரிமைகளை நாங்கள் மீறியிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் குற்றமற்றவர்கள். எமது இராணுவத்தினர் ஒழுக்கமானவர்கள். என்று இலங்கையின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று கிளிநொச்சியில் கூறியிருக்கின்றார்.
வரவிருக்கின்ற சித்திரை மாதத்து தமிழ் சிங்களப் புத்தாண்டையொட்டி, இராணுவத் தளபதி படையினரைச் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றும் இலங்கை மரபுக்கமைய இன்று அவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து அங்குள்ள படையினர் மத்தியில் உரையாற்றினார்.
முன்னதாக கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள மாவட்ட பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில் அந்த மாவட்டத்தின் கட்டளைத் தளபதி உள்ளிட்ட உயரதிகாரிகள் அவரை வரவேற்றனர். படையினரின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு அளிக்கப்பட்டது.
இரணைமடுவில் ஏ9 வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்கான நலன்புரி கடைத்தொகுதியை அவர் வைபரீதியாகத் திறந்து வைத்ததன் பின்னர், இரணைமடு படைத் தலைமையகத்தில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய இராணுவ விசாரணைகள் நடத்தப்பட்டன. அந்த விசாரணைகளில் இராணுவத்தினர் குற்றமற்றவர்கள் என்பது வெளிப்பட்டிருக்கின்றது. இது தொடர்பிலான அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கின்றது என்றும் இராணுவத் தளபதி தெரிவித்திருக்கின்றார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளிலும், மீள் கட்டுமானப் பணிகளிலும், அபிவிருத்தி வேலைத் திட்டங்களிலும் இராணுவத்தினர் பெருமளவில் பணியாற்றி வருகின்றார்கள்.
தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் இராணுவத்தினர் ஆற்றி வருகின்ற பங்களிப்பு குறித்து பலரும் பாராட்டியிருக்கின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ள இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவத்திற்கு உள்ள நற்பெயரைத் தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் இராணுவத்தினர் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நூறுவீதமான தமிழ் மக்களைக் கொண்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கும் வகையில் தமது கடமைகளைப் பொறுப்போடு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
இலங்கை மனித உரிமைகளைள மீறியிருப்பதாக ஜெனீவா மாநாட்டில் குறை கூறப்பட்டிருக்கின்றது. பல நாடுகள் இது குறித்து அங்கு விவாதிக்கின்றார்கள். அப்பாவிகளை இராணுவத்தினர் கொன்றார்கள் என்றும், பெண்கள் மீது பாலியல் குற்றங்கள் புரிந்தார்கள் என்றும், அங்கு குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் சனல் 4 தொலைக்காட்சியும் சிறுவர்களைக் கொன்றதாகவும் மற்றும் கொலைகளைச் செய்ததாகவும் குற்றங்களைச் சுமத்தியிருக்கின்றது. அங்கு அவர்கள் பல்வேறு விடயங்கள் பற்றி பேசுகின்றார்கள்.
இவை குறித்து எமக்கு எதுவுமே தெரியாது. இந்தக் குற்றங்கள் பற்றி எங்களுக்கு எவருமே இதுவரையில் சொன்னதும் கிடையாது. இந்தக் குற்றங்கள் தொடர்பாக எம்மிடம் யாரும் முறையிடவுமில்லை.
இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தக் காரியங்கள் இடம்பெற்று வருகின்றன. அதே நேரம் சில நாடுகள் இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செயற்படுகின்றன.
பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம், சிறுவன் ஒருவனைக் கொன்றது தொடர்பாகக் குற்றம் சுமத்தி வீடியோ காட்சிகளை வெளியிட்டிருக்கின்றது. இந்தச் சம்பவத்திற்கும் எமக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று இராணுவத்தினர் சார்பில் எமது ஜனாதிபதி மறுப்பு தெரிவித்திருக்கின்றார்.
ஜெனீவாவில் கூறப்படுகின்ற சம்பவங்களுக்கும் எமது இராணுவத்திற்கும் சம்பந்தம் இல்லை. எமது இராணுவத்தினர் மிகுந்த ஒழுக்கத்துடனும் அர்ப்பணிப்படனும் செயற்பட்டு வந்திருக்கின்றனர்.
இந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் இராணுவத்தினர் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இராணுவத்தினரின் நலன்களைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பல்வேறு நலத் திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றார்கள்.
இராணுவத்தினருக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் வைத்திய காப்புறுதித் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
வீடில்லாதவர்களுக்கான வீட்டுத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இராணுவத்தினருடைய பிள்ளைகள் சிறந்த கல்வியைப் பெறுவதற்கான விசேட பாடசாலை அமைக்கப்பட்டிருக்கின்றது.
இராணுவத்தினர் தமது தொழில் தகைமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு வசதியாக வெளிநாடுகளில் பயிற்சி நெறிகளில் பங்கு கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்திருக்கின்றார்.

.jpg)
No comments:
Post a Comment