Monday, March 4, 2013

திடீர் உடல்நல கோளாறு : இங்கிலாந்து ராணி ஆஸ்பத்திரியில் அட்மிட்!

Monday, March 04, 2013

லண்டன்::வயிற்று வலியால் அவதிப்பட்ட இங்கிலாந்து ராணி எலிசபெத், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி கேத் மிடில்டன் கடந்த ஆண்டு டிசம்பரில் கர்ப்பத்துக்காக சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தனியார் ரேடியோ ஒன்று ராணி குடும்பத்தினர் போன்று பேசி கேத்தின் சிகிச்சை குறித்து கேட்டறிந்து செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நர்ஸ் ஜெசிந்தா தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ரேடியோ ஜாக்கிகள் 2 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் (86) திடீரென கடந்த வெள்ளிக்கிழமையன்று வயிற்றுவலியால் அவதிப்பட்டார்.

உடனடியாக அவர் லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் செவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாயுக்கோளாறு பிரச்னையால் ராணிக்கு வயிற்றுவலி இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, தற்போது நலமாக உள்ளார். மேலும் 2 நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தாலி அதிபரின் அழைப்பை ஏற்று, எலிசபெத் வரும் புதனன்று கணவருடன் 2 நாள் பயணமாக அங்கு செல்ல இருந்தார். திடீர் உடல்நல கோளாறு காரணமாக அவரது இத்தாலி பயணம் மற்றும் ஒரு வார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது. ராணி 2ம் எலிசபெத் 87வது பிறந்த நாளை அடுத்த மாதம் கொண்டாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment