இலங்கையில் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பல்வேறு நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரின் நேற்றைய அமர்வில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவை கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட இந்த அமர்வில் கனடா, அயர்லாந்து, ஒஸ்ரியா, டென்மார்க் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் சர்வதேச அமைப்புக்கள் சிலவற்றின் பிரதிநிதிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இதன்போது கனடா குறிப்பிட்டது.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஸ்லோவாக்கியா சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பதாக விவாதத்தில் கலந்துகொண்ட சர்வதேச சட்டத்தரணிகள் ஆணைக்குழு குறிப்பிட்டது.
முன்னாள் பிரதம நீதியரசரை பதவி நீக்கியமை உள்ளிட்ட சில விடயங்கள் இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டமைக்கு சிறந்த உதாரணம் என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.
இலங்கையின் நிலைமை தொடர்பில் செயற்படுதல் சர்வதேச சமூகத்தின் பொறுப்பென சர்வதேச கல்வி அபிவிருத்தி தொடர்பான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக விடுக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக விவாதத்தில் கலந்துகொண்ட இலங்கையின் பிரதிநிதி குறிப்பிட்டார்.
இலங்கை பொதுநலவாய அமைப்பின் ஆரம்பகட்ட உறுப்பு நாடு என்பதால் அதன் தரம் மற்றும் கொள்கைகளை பாதுகாத்து செயற்படுவதாக இலங்கையின் பிரதிநிதி மேலும் சுட்டிக்காட்டினார்

No comments:
Post a Comment