Pages

Sunday, March 10, 2013

இலங்கை பிரச்னையில் காங்கிரஸ், மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை!

Sunday, March 10, 2013
சென்னை::இலங்கை பிரச்னையில், காங்கிரசும், மத்திய அரசும் ஒவ்வொரு நாளும் வேறுபட்ட கருத்துக்களை கூறிவருகின்றன. இதை, மவுனமாக தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது,' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

டில்லில் நடந்த டெசோ கருத்தரங்கம் பின்னடைவு என, செய்திகள் வெளியாகி வருகிறது. சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் கலந்துகொண்டு கட்சிகள் தான், டில்லியில் நடந்த கருத்தரங்கிலும் பங்கேற்றன. கூடுதலாக, சர்வதேச பொதுமன்னிப்பு அவை பிரதிநிதி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். எனவே, இதில் பின்னடைவு இல்லை.

ஆனால், காங்கிரசும், மத்திய அரசும், ஒவ்வொரு நாளும் மாறுபட்ட கருத்தைக் கூறி வருகின்றன.

பார்லிமென்டில் பேசிய, வெளியுறவுத் துறை அமைச்சர், அமெரிக்க தீர்மானம் குறித்து, தெளிவாக எதையும் கூறவில்லை. ஆனால், டில்லி டெசோ கருத்தரங்கில் பங்கேற்ற, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், "அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்போம்' என்றார்.

இதற்கிடையே, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் பேசுகையில், "ஈழத் தலைவர்களோடு, இலங்கை அரசு பேச்சு நடத்த வேண்டும்' எனக் கூறுகிறார். காங்கிரஸ் மற்றும் மத்திய அரசின் இப்போக்கினை, தொடர்ந்து மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது நிலை, நெருங்கிக் கொண்டுள்ளது.

எக்காரணம் கொண்டும், டெசோ நிலைபாட்டிலிருந்து பின்வாங்க முடியாது. திட்டமிட்டபடி, பொது வேலை நிறுத்தம், வரும், 12ம் தேதி நடந்தே தீரும். அனைவரும் ஆதரவு அளிக்க, அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதி வேண்டுகோள்மாணவர்கள் புறக்கணிப்பு:"ஈழப் பிரச்னையை முன்னிறுத்தி, சென்னை, லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும், சாகும் வரை, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கு, பதில் அளித்த மாணவர்கள், ஈழ ஆதரவுக்காக, மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தை நசுக்கியோர், இப்போதும், அந்தவேலையை செய்ய முனைகின்றனர்; எனவே, உண்ணாவிரதத்தை கைவிட முடியாது என, தெரிவித்தனர்.மாணவர்கள் போராட்டம் குறித்து, கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:ஈழப் பிரச்னையை முன்னிறுத்தி, 7ம் தேதி முதல், சாகும் வரை உண்ணா விரதத்தை, சென்னை, லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை தமிழர்களைக் காக்க, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞனின் உயிரும் முக்கியம்.இதை உணர்ந்து, சாகும் வரை உண்ணாவிரதம் என்பதை மாற்றி, வேறு வகை அறப் போராட்டங்களில், மாணவர்கள் ஈடுபட வேண்டும். எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தை, உடனடியாக மாணவர்கள் கைவிட வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதியின் வேண்டுகோளுக்கு, பதில் அளித்த, உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மாணவர்களில் ஒருவரான பிரிட்டோ கூறுகையில்,""2009ம் ஆண்டு, இலங்கை தமிழர்களுக்காக, மாணவர்கள் கிளர்ந்து எழுந்தபோது, அதை, அடக்கி ஒடுக்கியவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும்; இப்போதும், அதுபோல செய்துவிடாதீர்கள்; எங்களது போராட்டம் தொடரும்,'' என்றார்.

No comments:

Post a Comment