Pages

Sunday, March 10, 2013

வடமாகாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் யாழ் மாவட்டத்திலும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் விசேட அலுவலகங்கள்!

Sunday, March 10, 2013
இலங்கை::வடமாகாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் யாழ் மாவட்டத்திலும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் விசேட அலுவலகங்களை காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு திறக்கவுள்ளது.

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ். மாவட்ட அலுவலகம், யாழ். மாவட்ட செயலகத்திலும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான இணைந்த அலுவலகம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் திறக்கப்படவிருப் பதாக அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் தெரிவித்தார். இதற்கமைய யாழ்ப்பாண அலுவலகம் நாளையும், கிளிநொச்சி அலுவலகம் நாளை மறுதினம் 12 ஆம் திகதியும் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த அலுவலகங்களில் கடமையாற்றுவதற்கென தேர்வுசெய்யப்பட்ட வடபகுதியைச் சேர்ந்த 60 பட்டதாரிகளுக்கு அன்றையதினம் நியமனக் கடிதங்களையும் அமைச்சர் வழங்கவிருப்பதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்மொழிவை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு காணி அமைச்சுக்கு உள்ளது. இதற்கமைய வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கும், பாதுகாப்புப் படையினரின் பாவனைக்கு எடுக்கப்பட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் மீளப்பெற்றுக்கொடுக்கும் விசேட செயற்பாட்டை துரிதப்படுத்தும் வகையிலுமே இந்த விசேட அலுவலகங்கள் திறக்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இராணுவப் பயன்பாட்டுக்கென ஒதுக்கப்பட்ட காணிகளை சுவீகரிப்பதற்கும், ஏனைய காணிகளை உரிமைகளிடம் பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாக காணி சுவீகரிப்பு அதிகாரியொருவரும் வடமாகாணத்தில் நியமிக்கப்படவிருப்பதாக காணி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 5600 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் ஏற்கனவே கையளிக் கப்பட்டுள்ளன. இதுவரை கையளிக்கப்படாத காணிகளுக்கு நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் அலுவலகத் திறப்பு விழாக்களில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், பிரதியமைச்சர் சிறிபால கம்லத், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment