Pages

Friday, March 15, 2013

204 பரிந்துரைகள் - மனிதஉரிமைப்பேரவையின் மீளாய்வு அறிக்கை!

Friday, March 15, 2013
இலங்கை::இலங்கையில் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் அறிவித்து, 204 பரிந்துரைகளை கொண்ட மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கை இன்று (15) ஜெனிவா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இந்த அறிக்கைக்கு பதிலளிக்க இலங்கைக்கு 20 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது.

பெனின், இந்தியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்ற அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு தலா 20 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி மீளாய்வு அறிக்கையில் 103 பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த பரிந்துரைகள் நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையவை என்பதால், இதனை நிறைவேற்ற முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுதல், மரண தண்டனையை இரத்துச் செய்தல், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்தல், நாட்டின் ரகசியங்களை அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுதல் ஆகிய பரிந்துரைகளும், இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று 6 நாடுகள் ஊடாக இந்த யோசனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசசார்ற்ற அமைப்புகளின் செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது ஐக்கிய நாடுகளின் பொறுப்பு:- நவநீதம் பிள்ளை

இலங்கை அரசாங்கம் தமக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாக அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த செயற்பாட்டாளர்கள், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் நேற்று (14) முறைப்பாடு செய்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள பிள்ளை, அரசசார்ற்ற அமைப்புகளின் செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது ஐக்கிய நாடுகளின் பொறுப்பு எனக் கூறியுள்ளார்.

மனித உரிமை ஆணைக்குழு தலைமையகத்தின் 19 வது அறையில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஆணையாளரிடம் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த 36 பேர் கலந்து கொண்டனர்.

குற்றச்சாட்டுக்கள் எதனையும் ஒப்புவிக்க, அதனை முன்வைத்த தரப்பினர் தவறியுள்ளனர் ஜகத் ஜயசூரிய:-

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரை இலக்கு வைத்து, இலங்கை அரசு மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எதனையும் ஒப்புவிக்க, அதனை முன்வைத்த தரப்பினர் தவறியிருப்பதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வன்னி இராணுவ நடவடிக்கையின் போது, பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றங்களை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட இரண்டு இராணுவ விசாரணை சபைகள் மூலம், அந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்து அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் எந்த தரப்பாவது எதிர்காலத்தில், இந்த போர் குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவத்தினர் மற்றும் சாட்சியங்களை மீண்டும் முன்வைத்தால், அது குறித்து முழுமையான விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

போயகனே விஜயபாகு காலால் படை பிரிவின் மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவை இன்றைய கொழும்பு ஊடகங்களில் வெளிவந்தவற்றின் தமிழாக்கம்

No comments:

Post a Comment