Wednesday, March 13, 2013

இலங்கை கடற்படையினர் கைது செய்த தூத்துக்குடி மீனவர்கள் 16 பேர் இன்று ஊர் திரும்பினர்!

Wednesday, March 13, 2013
தூத்துக்குடி::தூத்துக்குடி தருவை குளத்தை சேர்ந்த மீனவர்களான ஆல்பர்ட் (வயது 27), மாணிக்கம் (26), ராஜன் (27), ரூபன் (23), செல்வராஜ் (55), தொம்மை அந்தோணி (50), சகாய மணி (25), குமார் (21), கென்னடி (50), ராபின் (26), மேன்லி (23), அப்பாஸ் (58), மற்றொரு அப்பாஸ் (59), நிஜாம் (45), ரபீக் (42), முருகன் (35) ஆகிய 16 பேர் கடந்த 3-ந்தேதி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி 16 பேரையும் பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்கள் நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து 16 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதன் பேரில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதையடுத்து 16 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து 16 மீனவர்களும் இந்திய கப்பல் படை கமாண்டர் பிரவீன்குமார் சின்கா தலைமையில் 3 விசை படகுகளில் தூத்துக்குடி புறப்பட்டனர். இன்று காலை 8-30 மணியளவில் 16 பேரும் தூத்துக்குடி வந்து சேர்ந்தனர்.

அவர்களை தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் பிரதீப்குமார், பங்குதந்தை இஷிதோர், தருவைகுளம் ஊராட்சி தலைவர் மகாராஜன் ஆகியோர் வரவேற்றனர். 16 பேரின் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு மீட்கப்பட்ட மீனவர்கள் மாணிக்கம், செல்வராஜ், முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 3-ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தோம். இரவு நேரம் என்பதால் எங்களுக்கு கடல் எல்கை பகுதி தெரியவில்லை. இலங்கை கடல் எல்கை பகுதியையொட்டி மீன்பிடித்து கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாங்கள் சென்ற 3 விசை படகுகளையும் சுற்றி வளைத்தனர். பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி எங்களை சிறைபிடித்தனர்.

நாங்கள் இந்திய கடல் பகுதியில்தான் மீன்கள் பிடித்தோம் என்று கூறினோம். ஆனால் அவர்கள் எங்கள் பேச்சை கேட்காமல் 3 விசைபடகுகளிலும் இருந்த வலைகளை அறுத்தெறிந்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி, கத்தியால் எங்களை மிரட்டி பிடித்து சென்று விட்டனர். அங்கு 16 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு எங்களுக்கு 18-ந்தேதி வரை சிறை தண்டனை விதித்தது.

மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை காரணமாக 7 நாட்களுக்குள் நாங்கள் விடுதலையாகிவிட்டோம். இதற்காக பிரமர் மன்மோகன்சிங், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இலங்கை மீனவர்களும் எல்லை தாண்டி வந்து இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருக்கிறார்கள். இந்திய கடற்படையினர் ரோந்து செல்லாததால் அவர்கள் தைரியமாக மீன் பிடிக்கிறார்கள். இலங்கை கடற்படையினர் எப்போதும் ரோந்து வருகிறார்கள். இதனால் அவர்கள் தமிழக மீனவர்களை பிடித்து சென்று வருகின்றனர். இந்திய கடற்படையினரும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி இலங்கை மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment