வேலூர்::ராஜிவ் கொலையாளிக்கு, ஸ்வீட் பாக்சில் மறைத்து, மொபைல்போன் கொடுக்க முயன்ற, சாப்ட்வேர் இன்ஜினியரை, போலீசார் கைது செய்தனர்.
வேலூர், தொரப்பாடி மத்திய ஆண்கள் சிறையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ளனர். நேற்று மதியம், 3:00 மணி அளவில், சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த, சாப்ட்வேர் இன்ஜினியர், சரவணகுமார், 25, ராஜிவ் கொலையாளிகளை பார்க்க, வேலூர் சிறைத்துறையினருக்கு மனு கொடுத்தார். "ஒரே நேரத்தில் மூன்று பேரையும் பார்க்க முடியாது' என, சிறை துறையினர் கூறினர். முருகனை மட்டும் பார்க்க, மனு கொடுக்கவே, சிறை அதிகாரிகள் அனுமதித்தனர். முருகனுக்கு கொடுக்க, ஸ்வீட் பாக்ஸ் வைத்திருந்தார். அதை சிறை அதிகாரிகள் சோதனையிட கேட்டதற்கு, "சாதாரண ஸ்வீட்' தான் என்றார். "சோதனை செய்தால் தான், கொடுக்க அனுமதிப்போம்' என, கூறி, சோதனையிட்டனர். அதில், வெளி நாட்டை சேர்ந்த, விலை உயர்ந்த மொபைல்போன், சிம் கார்டு, பேட்டரி இருந்ததை பார்த்து, சிறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சரவணகுமார் தப்பி செல்ல முயன்றதை அடுத்து, மடக்கிப் பிடித்து, பாகாயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சரவணகுமாரை கைது செய்த போலீசார், மொபைல், சிம், பேட்டரியை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதியிடம் மொபைல்: பெங்களூருவை சேர்ந்தவர் அசோக்குமார், 36. இவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று காலை, 11:00 மணிக்கு, சிறைக் காவலர்கள் ரோந்து சென்றனர். சிறை மருத்துவமனை அருகே, அசோக்குமார், மொபைல்போனில் ஜாலியாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார். காவலர்கள் பார்த்ததும், மொபைலை மறைக்க முயன்ற போது, காவலர்கள் மொபைலை பறிமுதல் செய்தனர். பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இட மாற்றம்: வேலூர் சிறையில், கடந்த இரு நாட்களுக்கு முன், பீடி, சிகரெட் கேட்டு கைதிகள், அங்குள்ள தண்ணீர் தொட்டியில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதற்கு காரணமான, சென்னையை சேர்ந்த, உதயகுமார், 34, சேலம் சிறைக்கும்; கடலூரை சேர்ந்த, மன்சூர், 35, திருச்சி சிறைக்கும் மாற்றப்பட்டனர்.

No comments:
Post a Comment