Sunday, February 24, 2013

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது - தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்!

Sunday, February 24, 2013
சென்னை::சத்தியமூர்த்தி பவனில் (23.02.2013) தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த முறை ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்தபோது அதை இந்திய அரசு ஆதரிக்க தமிழக காங்கிரஸ் குரல் கொடுத்தது. தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களையும் அழைத்து சென்று பிரதமரை நேரில் சந்தித்து வற்புறுத்தினோம்.

பாராளுமன்றத்தில் 2 முறை இலங்கை பிரச்சினையை எழுப்பி பேசி இருக்கிறோம். ஒரு தனி நாட்டின் மீதான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்ற கொள்கையை தளர்த்தி இந்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தது.

ஐ.நா. சபையின் மூவர் குழு அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஒரு அறிக்கை இலங்கை அரசிடம் உள்ளது. அதை அமுல்படுத்த இந்தியா வற்புறுத்தும்.

நேற்று கூட தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து இலங்கை தமிழர்கள் சம்பந்தமாக நமது உணர்வுகளை எடுத்துக் சொல்லி இருக்கிறார்கள். பிரதமரும் தமிழக மக்களின் உணர்வுகளை கேட்டுக்கொண்டு ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கையை அமுல்படுத்த இந்தியா உறுதியாக இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு பகுதியில் இந்திய அரசு தான் தமிழர்களுக்கு வீடுகள், பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகளை மீண்டும் கட்டிக் கொடுத்துள்ளது. விவசாயத்துக்காக 500 டிராக்டர்களும் வழங்கப்பட்டுள்ன. 1 லட்சம் பயிர் விதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பகுதியில் ரெயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

வெற்று கோஷங்களை நம்பாமல் இலங்கை தமிழர்களுக்கு உதவும் ஒரே அரசு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான். இலங்கை தமிழர்கள் எல்லா உரிமைகளையும் பெற்று அங்கு பயமின்றி வாழ காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். மத்திய அரசு செய்து காட்டும்.

தமிழ்நாட்டில் சில இயக்கங்கள் காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த நினைத்தால் அது நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் சோனியா, மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்துகிறதே என்று கேட்டதற்கு சின்ன குழுக்களின் அர்த்தமற்ற பேச்சுக்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இவர்களை விட்டால் இன்னொரு கட்டத்தில் ஒபாமாவை கூட விசாரிக்க வேண்டும் என்பார்கள் என்றார்.

No comments:

Post a Comment