Pages

Friday, December 7, 2012

கர்நாடகாவை கண்டித்து டெல்டாவில் போராட்டம் : மறியலில் ஈடுபட்ட 5000 பேர் கைது!

Friday, December 07, 2012
தஞ்சை::காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் பந்த் நடக்கிறது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நர்சரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பல இடங்களில் பஸ், ரயில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் உள்பட 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். சம்பா பயிரை காப்பாற்ற காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தரவேண்டும் என தமிழக விவசாயிகள் கோரி வருகின்றனர். தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன.

இதற்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, பாமக, தஞ்சை மாவட்ட காங்கிரஸ் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. அறிவிக்கப்பட்டபடி முழு அடைப்பு போராட்டம் இன்று காலை தொடங்கியது. 3 மாவட்டங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சாலைகள், தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தஞ்சை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் காலை 7 மணி வரை ஆங்காங்கே டீக்கடைகள், பெட்டிக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பின்னர் அவையும் அடைக்கப்பட்டன. கும்பகோணம் நகரில் சில கடைகள் திறந்திருந்தன. தஞ்சை மாவட்டத்தில் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. காமராஜ், சரபோஜி மார்க்கெட்களில் பெரிய மண்டிகள் செயல்படவில்லை.

கூடை வியாபாரிகள் மட்டும் காலையில் வியாபாரம் செய்தனர். பஸ்கள் இயக்கப்பட்டாலும் அதில் குறைந்த பயணிகளே சென்றனர். 5 பஸ்கள் உடைப்பு: திருச்சியில் இருந்து நேற்றிரவு பட்டுக்கோட்டை சென்ற அரசு பஸ்சை ஊரணிபுரம் என்ற இடத்தில் நள்ளிரவு 12 மணிக்கு சிலர் கற்களை வீசி தாக்கினர். இதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஒரத்தநாடு மின்வாரிய ஆபீஸ் அருகில் ஒரு தனியார் பஸ்சையும், தென்னமநாடு பைபாஸ் ரோடு, பருத்திக்கோட்டை நடைபாலம் ஆகிய இடங்களில் 2 அரசு பஸ்களையும் மர்ம நபர்கள் கல்வீசி உடைத்தனர். தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து அம்மாபேட்டைக்கு சென்ற அரசு பஸ்சை பைக்கில் வந்த 2 பேர் வழிமறித்து முன்பக்க கண்ணாடியை உடைத்தனர்.

இதையடுத்து, பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. 2, 3 பஸ்களாக சேர்த்து இயக்கப்பட்டது. அனைத்து பஸ் நிலையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் நல்லூரில் உள்ள கோவில்களப்பால் எல்பிஜி கேஸ் சேமிப்பு கிடங்கை விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் 150 விவசாயிகள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதையடுத்து அங்கு பணி நிறுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஎம்) மாநில பொதுச்செயலாளரும் சிதம்பரம் எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 100 பேர் தஞ்சையில் ரயில் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிவகங்கை குணசேகரன் தலைமையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

நாகை மாவட்டத்தில் 13 இடங்களில் சாலை மறியல், 3 இடங்களில் ரயில் மறியல், பாஜ சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகை ரயில் நிலையத்தில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் துரை.மாணிக்கம், மார்க்சிஸ்ட் சண்முகம் உள்பட சுமார் 100 பேரும் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரசை மறிக்க முயன்ற நாகை எம்எல்ஏ மாலி, வட்ட செயலாளர் ஸ்டாலின் உள்பட ஏராளமானோரும் கைது செய்யப்பட்டனர். 3 மாவட்டங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பந்த் போராட்டத்தையொட்டி 3 மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஸ், ரயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

No comments:

Post a Comment