Wednesday,June,13,2012இலங்கை::வடமாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அமெரிக்கா மட்டுமல்ல நாமும் கோருகின்றோம். வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி அப்பகுதி மக்களுக்கு சிவில் நிர்வாகத்தை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
வடக்கில் தேர்தலை நடத்துவதன் மூலமே அதிகாரத்தை பரவலாக்கி தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர், வடபகுதியில் அமைதியான சூழல் உருவாகியுள்ளதோடு, சமாதானம் ஏற்பட்டுள்ளதென அரசாங்கம் சர்வதேச ரீதியில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றது.
அது உண்மையென்றால் ஏன் அரசாங்கம் வடபகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் காலத்தை கடத்துகின்றது.
யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டது. ஆனால் வடபகுதி மக்களுக்கு சிவில் நிர்வாகத்தை வழங்காது அரசாங்கம் காலத்தை கடத்துகிறது.
வேறு இடங்களில் மாகாண சபைகளை கலைத்து தேர்தலை நடத்துவதிலிருந்து உடனடியாக வடபகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அமெரிக்காவும் அதனை வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வும் இதனையே வலியுறுத்துகின்றது. இதன் மூலம் அதிகாரத்தை பரவலாக்கி சிவில் நிர்வாகத்தையும் அசியல் தீர்வையும் வழங்க முடியும்.
ஆனால் அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பயப்படுகிறது.
ஏனெனில் நிச்சயம் அரசாங்கம் தோல்வியைத் தழுவும். அத்தோடு வடபகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்ற உண்மை சர்வதேசத்திற்கு புரிந்து விடுமென்றும் எண்ணுகின்றது.
வடபகுதியில் அமைதி, சமாதானம் நிலவுகின்றதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து உண்மையெனில் உடனடியாக அங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.
மே தினம்
யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கம் கோரி கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிலர் விளக்கமளித்து பதில் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். ஒரு சிலரது விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றன.
இக்கடிதங்கள் அனைத்தும் ஒழுக்காற்று குழுவிடம் கையளிக்கப்படும். அனைத்தும் ஆராயப்பட்ட பின்னர் அவை செயற்குழுவிடம் கையளிக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
No comments:
Post a Comment